தந்தை வறுமை எய்திடல்
ஈங்கி தற்கிடை யெந்தை பெருந்துயர்
எய்தி நின்றனன்,தீய வறுமையான்;
ஓங்கி நின்ற பெருஞ்செல்வம் யாவையும்
ஊணர் செய்த சதியில் இழந்தனன்;
பாங்கி நின்று புகழ்ச்சிகள் பேசிய
பண்டை நண்பர்கள் கைநெகிழ்த் தேகினர்;
வாங்கி யுய்ந்த கிளைஞரும் தாதரும்
வாழ்வு தேய்ந்தபின் யாது மதிப்பரோ? 39
பர்ப்ப நக்குலங் கெட்டழி வெய்திய
பாழ டைந்த கலியுக மாதலால்,
வேர்ப்ப வேர்ப்பப் பொருள் செய்வ தொன்றையே
மேன்மை கொண்ட தொழிலெனக் கொண்டனன்;
ஆர்ப்பு மிஞ்சப் பலபல வாணிகம்
ஆற்றி மிக்க பொருள்செய்து வாழ்ந்தனன்;
நீர்ப்ப டுஞ்சிறு புற்புத மாமது
நீங்க வேயுளங் குன்றித் தளர்ந்தனன்; 40
தீய மாய வுலகிடை யொன்றினில்
சிந்தை செய்து விடாயுறுங் காலதை
வாய டங்க மென்மேலும் பருகினும்
மாயத் தாகம் தவிர்வது கண்டிலம்;
நேய முற்றது வந்து மிகமிக
நித்த லும்மதற் காசை வளருமால்.
காய முள்ள வரையுங் கிடைப்பினும்
கயவர் மாய்வது காய்ந்த உளங்கொண்டே.41
'ஆசைக் கோரள வில்லை விடயத்துள்
ஆழ்ந்த பின்னங் கமைதியுண் டாமென
மோசம் போகலிர்'என்றிடித் தோதிய
மோனி தாளிணை முப்பொழு தேத்துவாம்;
தேசத் தார்புகழ் நுண்ணறி வோடுதான்
திண்மை விஞ்சிய நெஞ்சின னாயினும்
நாசக் காசினில் ஆசையை நாட்டினன்
நல்லன் எந்தை துயர்க்கடல் வீழ்ந்தனன்.
