சோழர்கள் தோற்றமும் வரலாறும்
சோழர்களின் தோற்றம் பற்றிய தெளிவான சான்றுகள் எதுவும் இல்லை. பொதுவாகத் தமிழ் நாட்டு அரச குடிகள் பற்றிய தகவல்களைப் பெற உதவும் மூலங்களான, சங்க இலக்கியங்கள் கிறித்து சகாப்தத்தின் தொடக்க காலத்தைச் சேர்ந்த சோழ மன்னர்கள் பற்றி ஓரளவு தகவல்களைப் பெற உதவினாலும், அவர்கள் வாழ்ந்த காலப் பகுதிகளை ஐயத்துக்கு இடமின்றி அறிந்து கொள்வதோ, அவர்கள் வரலாறுகளை முழுமையாக அறிந்து கொள்வதோ இயலவில்லை. இலங்கையின் பாளி மொழியில் எழுதப்பட்ட வரலாற்று நூலான மகாவம்சத்தில் தரப்படுகின்ற செய்திகள் சில சோழ மன்னருடைய காலங்களைத் தீர்மானிப்பதற்குப் பயனுள்ளவையாக அமைகின்றன. இவற்றைவிட, சோழ நாடு மற்றும் அங்கிருந்த நகரங்கள் பற்றிய சில தகவல்களைப் பெறுவதற்கு, கிறித்து சகாப்தத்தின் முதலாவது நூற்றாண்டில், அலெக்சாந்திரியாவைச் சேர்ந்த வணிகன் ஒருவன் எழுதிய எரித்ரேயன் கடலின் வழிகாட்டி நூல் (Periplus of the Erythraean Sea), அதன் பின் அரை நூற்றாண்டு கழித்து தொலெமி (Ptolemy) என்னும் புவியியலாளரால் எழுதப்பட்ட நூல் என்பவை ஓரளவுக்கு உதவுகின்றன. இவற்றுடன் கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள் என்பனவும் சோழர் பற்றிய தகவல்களைத் தருகின்றன.
