சோ ராமசாமி

சோ ராமசாமி

bookmark

வாழ்க்கை வரலாறு

சோ ராமசாமி சென்னையில் பிறந்தவர். இவருடைய தந்தையார் ரா. சீனிவாசன், தாயார் ராஜம்மாள். இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பை மயிலாப்பூர் பி.எஸ். உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை லயோலா கல்லூரியிலும் பயின்று இளநிலை அறிவியல் (பி.எஸ் சி) பட்டப் படிப்பை விவேகானந்தா கல்லூரியிலும் பயின்றார். பின் 1953-55-ஆம் ஆண்டுகளில் சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று இளநிலைச்சட்டப் படிப்பில் (பி.எல்) பட்டம் பெற்றார். 1957 முதல் 1962 வரை சென்னை உயர் நீதி மன்றத்தில் வக்கீலாகப் பணியாற்றினார். 1962 முதல் டி.டி.கே (T.T.K) கம்பெனிகளுக்குச் சட்ட ஆலோசகராகப் பணியாற்றினார். இவருக்கு 1966 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். ‘சோ’ எனும் பெயர் பகீரதன் எழுதிய தேன்மொழியாள் மேடை நாடகத்தில் இவர் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயராகும்.

1957 ஆம் ஆண்டு நாடகங்களை எழுதத் துவங்கினார். 1970 ஆம் ஆண்டு துக்ளக் வார இதழைத் தொடங்கினார். பின்னர் 1976ஆம் ஆண்டில் PickWick என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார்.

இவர் 14 திரைப்படங்களுக்கு கதை எழுதியுள்ளார். 200 திரைப்படங்களில் நடித்துள்ளார். நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார். நான்கு தொலைக்காட்சிப் படங்களுக்குக் கதை எழுதி இயக்கி நடித்தும் உள்ளார்.

இவர் மாநிலங்களவை உறுப்பினராக வாஜ்பாயால் நியமனம் செய்யப்பட்டு 1999 முதல் 2005 வரை பணியாற்றினார்.