சுந்தரலிங்கம்

bookmark

தளபதி சுந்தரலிங்கம் தமிழ் நாடு, தூத்துக்குடி மாவட்டம் கவர்னகிரி என்னும் ஊரில் பிறந்த விடுதலை போராட்ட வீரர். இவர் வீரபாண்டிய கட்டபொம்மன் படையில் வீரராகச் சேர்ந்து பின்னாளில் துணைத் தளபதியாகவும், தளபதியாகவும் மாறினார்.

கும்பினிக்கு (ஆங்கிலேயருக்கு) எதிராக நடந்த போரில் வெள்ளையன், கந்தன் பகடை, முத்தன் பகடை , கட்டன கருப்பணன் போன்றோர்களுடன் பங்கு பெற்று இறந்தவர். தமிழக அரசு இவர் பிறந்த ஊரில் நினைவு சின்னமும், அழகு வளையமும் எடுத்துள்ளது.

மேலும் நினைவாக முதுகுளத்தூரில் இவருக்கு ஒரு சிலை வைக்கப்பட்டுள்ளது. சுந்தரலிங்கம் தேவேந்திரர் இனத்தைச் சேர்ந்தவர். 1997 இல் இவரது நினைவாக ஒரு போக்குவரத்துக் கழகத்துக்கு தமிழக அரசு பெயர் சூட்டியது. இதனை முக்குலத்தோர்கள் ஏற்க மறுத்ததால், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் சாதிக் கலவரம் ஏற்பட்டது. இதனால் தமிழ்நாடு மாவட்டங்கள், போக்குவத்துக் கழகங்கள் ஆகியவற்றுக்கு இடப்பட்டிருந்த அனைத்து நபர்களின் பெயர்களும் நீக்கப்பட்டன.

தளபதி சுந்தரலிங்கம் அவர்களின் வரலாறு:-

வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டு பல ஆண்டுகள் கழிந்து அவருடன் போரில் பங்கு பெற்றவர்களை பற்றி நாட்டுபுற பாடல்களும், கூத்துகளும் இயற்றப்பட்டன. இப்படியாக இயற்றப்பட்ட பாடல்களில், கூத்துகளில் தனது குமுகத்தை சேர்ந்தவரை பற்றி பெருமையாக இட்டு கட்டி கூறப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் விளம்புகின்றனர். வானமாமலை இப்பகுதியில் வழங்கப்பட்ட நாட்டு புற பாடல்களை தொகுத்துள்ளார். இதனின் ஊடாகவே இப்போரில் பங்கு பெற்ற சுந்தரலிங்கம், வெள்ளையன், கந்தன் பகடை, முத்தன் பகடை , கட்டன கருப்பணன் போன்றவர்களை அறிய முடிகிறது.

விடுதலைப் போராட்டத்தில் சுந்தரலிங்கத்தின் பங்கு:-

வெள்ளையர்களின் ஆவணப்படி கட்டபொம்மன் , ஊமைத்துரை, தானாதிபதி இவர்களை பற்றித் தான் அறியப்படுகிறது. மற்றவர்களின் வீரம் செறிந்த போராட்டங்கள் நாட்டுப்புற பாடல்கள் மூலம் தான் தெரியவருகிறது.

கட்டபொம்மனின் படைத்தளபதி மாவீரன் சுந்தரலிங்கம்

பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமம் கெவிணகிரி. இங்கு ஒரு விவசாயிக்கு மகனாகப் பிறந்தவன் தான் சுந்தரலிங்கம். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன். சுந்தரலிங்கம் தனது ஊரில் உள்ள கண்மாயை (குளம்) பக்கத்து பாளையங்காரர்கள் மறிந்து கட்டும் பொழுது ஏற்படும் சண்டையில், மிக திறமையாக போரிடுவதால் அம்முயற்சி தடுக்கப்படுகிறது. இப்போரை அறிந்த கட்டபொம்மன், சுந்தரலிங்கத்திற்கு தனது படைபிரிவில் முக்கிய இடத்தை அளிக்கிறார். அவனது வீரத்தைக் கேள்விப்பட்ட கட்டபொம்மன் தனது ஒற்றர் படைக்குத் தளபதியாக்கினான். விரைவில் அனைத்துப் படைகளுக்கும் தளபதியாக உயர்ந்தான்.

சுந்தரலிங்கத்தின் பொறுப்பில் தான் கட்டபொம்மனின் தானியக்கிடங்கும், வெடிமருந்துக் கிடங்கும் இருந்தன. கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் முட்டல், உரசல் உருவான போது வெள்ளையத்தேவனும், சுந்தரலிங்கமும் கட்டபொம்மனுக்கு பக்கபலமாக விளங்கினர்.

கட்டபொம்மனை பல நாட்கள் அலைக்கழிய வைத்து ராமநாதபுரம் அரண்மனையில் ஜாக்சன் துரை சந்தித்த போது சுந்தரலிங்கமும் உடனிருந்தான். அந்த சந்திப்பு பின்பு பெரும் சண்டையாக மாறிய போது சுந்தரலிங்கத்தின் வாளுக்கு பல வெள்ளைச் சிப்பாய்கள் மாண்டனர்.

இதையடுத்து கட்டபொம்மனை அழிக்க வெள்ளையர்கள் 1799 ல் பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்தார்கள். ஆங்கிலேயப் படை பாஞ்சாலங்குறிச்சிக்கு வெளியே கரிசல் காட்டில் முகாமிட்டிருந்தது. பீரங்கிகள், வெடிகுண்டுகள், துப்பாக்கிகளுடன் வெள்ளையர்களின் படை குவிந்திருந்தது.

1799 செப்டம்பர் 8ம் தேதி சுந்தரலிங்கம் தனது முறைப்பெண்ணான வடிவுடன் ஆடுமேய்ப்பவர்களைப் போல வெள்ளையர்களின் வெடிமருந்து கிடங்குப் பகுதிக்குப் போனான். தீப்பந்தத்தைக் கொளுத்தியபடி சுந்தரலிங்கமும், வடிவும் வெடிமருந்துக் கிடங்கிற்குள் பாய்ந்தார்கள். பலத்த வெடிச்சத்தத்துடன் கிடங்கு தீப்பிடித்து எரிந்தது. சுந்தரலிங்கமும், வடிவும் இந்திய சுதந்திரப் போரின் முதல் தற்கொலைப் படை தாக்குதல் தொடுத்தவர்களானார்கள். அவர்களது வீர மரணத்திற்கு அடுத்த நாள் நடைபெற்ற போரில் பாஞ்சாலங்குறிச்சி ஆங்கிலேயர் வசமானது.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் என்பதாலேயே சுந்தரலிங்கத்தின் வீரம் வரலாற்றில் முக்கியத்துவம் பெறாமல் போய்விட்டது. அதனினும் கொடுமை, அந்த மாவீரனது நினைவாக விருதுநகர் மாவட்டத்தில் ஓடும் அரசு பேருந்துகளுக்கு 'வீரன் சுந்தரலிங்கம் போக்குவரத்துக் கழகம்' என்று கலைஞர் கருணாநிதி பெயரிட்டபோது, அதைப் பொறுக்க மாட்டாமல் ஆதிக்க சாதியினர் அந்தப் பேருந்துகளை ஊருக்குள் வரவிடாமல் தடுத்து தீயிட்டுக் கொளுத்தியதும், பெரும் சாதிக்கலவரத்தை உண்டாக்கியதும் தமிழக வரலாற்றின் அவமானகரமான கருப்புப் பக்கங்கள்.

பின்னாளில் இராமநாதபுரத்தில் ஏற்படும் கலவரத்தில் சுந்தரலிங்கமே ஒரு வெள்ளையரை வீழ்த்தி கட்டபொம்மனுக்கு ஏற்பட்ட இழுக்குகளை நீக்குவதாக தமிழவேள் என்னும் ஆய்வாளர் நாட்டுபுற பாடல்களை கொண்டு உறுதி செய்கிறார். மேலும் பல ஆய்வாளர்கள் தானாதிபதிதான் வெள்ளையரை கொன்றார் என்றும் கூறி வருவதால் இக்கருத்தில் குழப்பநிலையும் உள்ளது.

இதன் பின் தான் சுந்தரலிங்கம் துணை படை தளபதியாக கட்டபொம்மனால் நியமிக்கப்படுவதாக தமிழவேள் தனது ஆய்வு மூலம் கூறுகிறார்.

ஊமைதுரையை பாளையங்கோட்டை சிறையில் இருந்து மீட்பதற்கு சுந்தரலிங்கமும், முத்தன், கந்தன் படைகள் ஈடுபட்டதாகவும், மேலும் ஏழு நாளில் கோட்டையைக் கட்டி முடித்ததாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இறுதியாக நடக்கும் விருப்பாச்சி மலையில் நடக்கும் போரில் ஊமைதுரையோடு சுந்தரலிங்கம் பிடிக்கப்பட்டு தூக்கிலிடப்படுவதாக தமிழவேள் தனது ஆய்வின் மூலம் தெரிவிக்கிறார். மேலும் சில ஆய்வாளர்களால் சுந்தரலிங்கம் தனது மனைவி வடிவு வோடு , கும்பினியாரின் வெடிமருந்து கிடங்குகளை ஒரு தற்கொலை முகவர்களாக சென்று அழித்ததாக சொல்லப்படுகிறது.

தளபதி சுந்தரலிங்கம் அவர்களின் வெண்கலச் சிலை:-

தளபதி சுந்தரலிங்கம் அவர்களின் நினைவாக பிப்ரவரி 23, 2014 அன்று தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி – எட்டயபுரம் சாலை சந்திப்பில் ஏழு அடி உயர வெண்கலச் சிலை ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மொத்த ஆக்கச் செலவு எட்டு இலட்சம் ஆகும்.