சுதந்திரப் பெருமை

சுதந்திரப் பெருமை

bookmark


( "தில்லை வெளியிலே கலந்துவிட்டாலவர் திரும்பியும் வருவாரோ?" என்னும் வர்ணமெட்டு)

வீர சுதந்திரம் வேண்டிநின்றார் பின்னர்
  வேறொன்று கொள்வாரோ? - என்றும்
ஆரமு துண்ணுதற் காசைகொண்டார் கள்ளில்
  அறிவைச் செலுத்துவா ரோ? (வீர)    1

புகழுநல் லறமுமே யன்றியெல் லாம்வெறும்
  பொய்யென்று கண்டாரேல் - அவர்
இகழுறும் ஈனத்தொண் டியற்றியும் வாழ்வதற்கு
  இச்சையுற் றிருப்பா ரோ? (வீர)    2

பிறந்தவர் யாவரும் இறப்ப துறுதியெனும்
  பெற்றியை அறிந்தாரேல் - மானம்
துறந்தரம் மறந்தும்பின் உயிர்கொண்டு வாழ்வது
  சுகமென்று மதிப்பா ரோ? (வீர)    3

மானுட ஜன்மம் பெறுவதற் கரிதெனும்
  வாய்மையை உணர்ந்தாரேல் - அவர்
ஊனுடல் தீயினும் உண்மை நிலைதவற
  உடன்படு மாறுளதோ? (வீர)    4

விண்ணி லிரவிதனை விற்றுவிட் டெவரும்போய்
  மின்மினி கொள்வாரோ?
கண்ணினும் இனிய சுதந்திரம் போனபின்
  கை கட்டிப் பிழைப்பாரோ? (வீர)    5

மண்ணிலின் பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்
  மாண்பினை யிழப்பாரோ?
கண்ணிரெண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்
  கைகொட்டிச் சிரியா ரோ? (வீர)    6

வந்தே மாதரம் என்று வணங்கியபின்
  மாயத்தை வணங்கு வாரோ?
வந்தே மாதரம் ஒன்றே தாரகம்
  என்பதை மறப்பாரோ? (வீர)    7