சிருஷ்டி பேதங்கள்

bookmark

சிருஷ்டி பேதங்கள் சிருஷ்டி என்பது படைத்தல் என்பதை குறிக்கக்கூடிய செயலாகும். எந்தவொரு செயலுக்கும் உருவாக்கமும், படைத்தலும் இன்றியமையாத ஒன்றாகும். அதேவிதத்தில் இந்த உலகத்தின் உருவாக்கமும் அதில் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய உயிரினங்களின் படைப்பு என்பது மாபெரும் ரகசியங்களையும், சூட்சுமங்களையும் ஒருங்கிணைத்து செய்யப்பட்ட ஒன்றாக இருக்கக்கூடியதாகும். இந்த படைப்பும் அவரவர்கள் செய்கின்ற வினைகளின் அடிப்படையில் இயங்கி கொண்டிருக்கின்றது.நான்முகனான பிரம்மன் தோன்றுவதற்கு முன்பாகவே பிரகிருதியானால் மகத்தகங்கார தன்மாத்திரைகள் உண்டாகி இருப்பது என்பது பிராகிருத சிருஷ்டி என்றும் அழைக்கப்படுகின்றது. தின பிரளயத்தின் முடிவில் பிரஜைகளை உருவாக்குவது என்பது நைமித்திக சிருஷ்டி என்றும் அழைக்கப்படுகின்றது. ஜீவா ஆத்மாக்கள் செய்கின்ற பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப மனித மிருகபட்சி ரூபங்களாக பிறப்பெடுக்க வைக்கும் சிருஷ்டி என்பது நித்திய சிருஷ்டி என்று அழைக்கப்படுகின்றது. மைத்ரேய முனிவரே! ஜெகத் காரகனான ஸ்ரீமஹாவிஷ்ணு இந்த அண்டசராசரங்கள் தோன்றி இருக்கக்கூடிய அனைத்து உயிரினங்களின் சரீரங்களிலும் இருந்துகொண்டு சிருஷ்டி, ஸ்திதி முதலிய செயல்களை இன்றும் செய்து கொண்டே இருக்கின்றார். ஜெகத் நாயகனான ஸ்ரீமந் நாராயணன் அனைத்து சரீரங்களிலும் இருக்கும் பொழுது கால வேறுபாடுகளுக்கு ஏற்ப ஏன் சிருஷ்டியாதிகளை படைத்தல் வேண்டும் என்ற கேள்வியும் ஏற்படும். இந்த பூமியில் ஏன் இந்த பிரபஞ்சத்திலேயே தோன்றியிருக்கக்கூடிய அனைத்து உயிர்களின் படைத்தல், காத்தல், அழித்தல் முதலிய அனைத்து சக்திகள் எப்பொழுதும் ஸ்ரீமந் நாராயணனுடைய சங்கல்பத்திற்கு ஏற்றவாறு உண்டாகின்றன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். படைத்தல், காத்தல், அழித்தல் முதலிய செயல்கள் யாவும் சாத்வீக குணம், ராட்சஸ குணம், தாமச குணம் முதலிய மூன்று குணங்களால் உருவாக்கப்பட்டவை ஆகும். எவனொருவர் இந்த குணங்களுக்கு அப்பாற்பட்டு இருக்கின்றார்களோ அவர்கள் எந்தவிதமான மாற்றமும் இன்றி சர்வ சங்க விமுக்தனாய் பிரம்ம சாயுஜ்யத்தை அடைகின்றார்களே அவர்கள் அப்படியே இருப்பதன்றி மீண்டும் திரும்பமாட்டார்கள்.