சிந்துபாத்தின் நான்காவது கப்பல் பயணம்

சிந்துபாத்தின் நான்காவது கப்பல் பயணம்

bookmark

மூன்று கப்பல் பயணங்களை முடித்த சிந்துபாத் தனது கடைசி கப்பல் பயணத்தில் ஏராளமான பொருள்களை சேர்த்தான். அதன் விளைவு அவனது மனம் நான்காவது கப்பல் பயணத்தை மேற்கொள்ள ஆசை கொண்டது. அதனைத் தூண்டும் விதத்தில் சில வர்த்தகர்கள் வந்து சிந்துபாத்தை சந்தித்து ஆசை வார்த்தைகள் காட்டினர். ஆசை யாரைத் தான் விட்டது. சிந்துபாத்தும் அதற்கு விதி விலக்கா என்ன? எனவே தான் நான்காவது கப்பல் பயணத்திற்கான அனைத்து வியாபார சரக்குகளையும் வாங்கினான். அதனை துறைமுகத்திற்கு கொண்டு வந்து கப்பலில் ஏற்றினான். உடன் இதர வியாபாரிகளின் பொருள்களும் கப்பலில் ஏற்றப்பட்டது. அனைவரும் கப்பலில் ஏறிய சில கணங்களில் கப்பல் அத்துறைமுகத்தை விட்டுப் புறப்பட்டது.

அப்படியாக அங்கிருந்து புறப்பட்ட கப்பல் எண்ணற்ற தீவுகளை கடந்து சென்றது. ஒவ்வொரு தீவிலும் கப்பல் நங்கூரம் போட்டு நிறுத்தப்பட்டது. அவ்விடங்களில் எல்லாம் இறங்கி சிந்துபாத் உட்பட அனைத்து வர்த்தகர்களும் தங்களது பொருட்களை விற்று கணிசமான அளவு லாபம் சம்பாதித்தனர். இப்படியே பயணம் போய்க் கொண்டு இருந்த வேளையில். ஒரு நாள் அந்தக் கப்பல் "அல் அ ஃ பா" என்னும் தீவை அடைந்தது. அங்கு இறங்கிய வர்த்தகர்கள் அங்கு மனிதர்கள் யாரும் காணப்படாததால் சிறிது நேரம் அந்தத் தீவிலேயே ஓய்வு எடுக்க சித்தம் கொண்டனர்.

சிந்துபாத்தும் சற்று தொலைவில் அவனுக்கென்று ஒரு தனிமையான இடத்தை தேர்ந்தெடுத்து அங்கு ஓய்வு எடுக்கத் துவங்கினான். அப்படி ஓய்வு எடுத்தவன் சற்று நேரத்திற்கெல்லாம் களைப்பில் அப்படியே உறங்கியும் விட்டான். பல மணி நேரம் கழித்து கண் விழித்த சிந்துபாத்திற்கு அதிர்ச்சி காத்துக் கொண்டு இருந்தது. ஆம்! அவனுடன் வந்த வணிகர்கள் யாருமே அவ்விடத்தில் காணப்படவில்லை. அனைவரும் சிந்துபாத் ஏறிவிட்டதாக நினைத்து அந்தக் கப்பலில் ஏற்கனவே புறப்பட்டு விட்டனர். அதனை சிந்துபாத்தும் உடனுக்குடன் அனுமானித்துக் கொண்டு. செய்வதறியாது துடித்துப் போனான். அந்தத் தீவில் மக்கள் யாருமே இருப்பதாக அவனுக்குத் தெரியவில்லை. காரணம் அந்தத் தீவு அவ்வளவு நிஷப்தமாக இருந்தது. இன்னும் சொல்லப் போனால் அந்தத் தீவின் நிஷப்தம் சிந்துபாத்தை வெகுவாக பயமுறுத்தியது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் அந்த தீவினுள் செல்ல முடிவு செய்தான் சிந்துபாத். ஒருவேளை அந்தத் தீவில் எங்கேனும் மனித நடமாட்டம் காணப்பட்டால் அவர்கள் தனக்கு உதவலாம் என்று சிந்துபாத் நினைத்தான். அதனால் தான் சிந்துபாத் அந்தத் தீவின் உள்ளே காலடி எடுத்து வைத்து வெகு தூரம் சென்றான்.

அந்தத் தீவு மிகவும் செழிப்பான தீவாக காணப்பட்டது. இயற்கையில் மட்டும் அல்ல, எல்லாவிதத்திலுள்ள தான். அவ்விடத்தில் இருந்த சுரங்கங்களில் வைரக் கற்கள் கொட்டிக் கிடப்பதை பார்த்தான் சிந்துபாத். அவை சர்வ சாதாரணமாக ஆள் நடமாட்டமே இல்லாத அந்த இடத்தில் கூழாங்கற்களை போல அதிக அளவில் சிந்தி சிதறிக் கிடந்தது. அவற்றை எல்லாம் பத்திரமாக எடுத்து வைத்துக் கொண்டான் சிந்துபாத். அவன் மனம் மகிழ்ந்தது. இந்த வைரத்தை எல்லாம் தன்னிடம் காட்டத் தான் இறைவன் தன்னை அந்தத் தீவுக்கு அழைத்து உள்ளதாக அவனது மனம் எண்ணியது. அத்துடன் அந்தத் தீவில் இருந்த மண்ணில் அதிக அளவில் தாதுப் பொருள்கள் இருப்பதைக் கண்டான் சிந்துபாத். அவை சூரிய ஒளியில் மின்னிக் கொண்டு இருந்தது.

அது மட்டும் அல்ல, அந்தத் தீவில் மரங்கள் ஏராளமாக வளர்ந்து செழிப்புடன் காணப்பட்டது. "அம்பர்" என்னும் வாசனைக் குழம்பு சூரிய வெப்பத்தால் உருகி, ஓடைகளில் ஓடி இறுதியில் கடலுக்குள் சென்றது. இவ்விதம் உருகி வந்த அம்பர் குழம்பு காய்ந்ததும் பெரிய பெரிய மீன்கள் அதனை விழுங்கவே அந்தக் குழம்பு வயிற்றுனுள் சென்று மீன்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்; எனவே எரிச்சல் தாங்காமல் மீன்கள் அவற்றை உமிழ்ந்து விடவும் கடற்கரை ஓரத்தில் மிதந்து வரும் கடல் அலைகள் அம்பரைக் கொண்டு வந்து கரை சேர்க்கும்.

இப்படியாக அம்பர் குழம்பானது வாய்க்கால் வழியாக ஓடுவதால் அதன் கரைகள் எல்லாம் கமகம என்று மணம் வீசும். மேலும் பல இடங்களில் கட்டிப்பட்டு நிற்கும். அத்துடன் சூரிய ஒளியில் மீண்டும் உருகி ஓடுவதும் உண்டு. இப்படியாக ஒரு இரு தினங்களில் சிந்துபாத் அந்தத் தீவின் வளமையை அறிந்து கொண்டான். பழங்கள் செறிந்த மரங்களைக் கொண்டதாக அந்தத் தீவு இருந்து வந்தது. சிந்துபாத்தின் பசியைத் தீர்க்க அந்தத் தீவில் இருக்கும் பழங்களே அவனுக்குப் போதுமானதாக இருந்தது. அத்துடன், அத்தீவில் அங்கு காணப்பட்ட இன்னொரு ஓடையின் கரைகளில் மேலும் பல இடங்களில் நவ ரத்தினங்களை கண்டு எடுத்தான் சிந்துபாத். அவற்றையும் பத்திரமாக மூட்டையாகக் கட்டிக் கொண்டான்.

ஒரு நாள் சிந்துபாத்தின் மனதில்," இப்படியே இந்தத் தீவில் நாம் நேரத்தை கடத்திக் கொண்டு இருந்தால் அது சரியாக இருக்காது. இந்தத் தீவில் இருந்து தப்பிச் செல்ல நாம் தான் ஏதேனும் ஒன்றை செய்து ஆக வேண்டும்" என்று தோன்றியது. உடனே சிந்துபாத்தின் மூளை மிகவும் வேகமாக செயல்பட்டது. அதன் படி அந்த ஓடை ஏதாவது ஒரு இடத்தில் சென்று முடியும் அல்லவா? எனில் அந்த ஓடை வழியாகவே ஒரு ஓடத்தை செய்து கொண்டு சென்றால் என்ன என்ற எண்ணம் அவனது மனதினில் எழுந்தது. உடனே சிந்துபாத் அங்கு கிடைத்த சில பொருள்களைக் கொண்டு ஒரு, இரு தினத்தில் ஒரு வலுவான ஓடத்தை தயார் செய்து கொண்டான். அது மட்டும் அல்ல, அந்த ஓடம் அந்தத் தண்ணீரின் வேகத்தை தாங்கும் படியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பிறகு அந்த ஓடத்தின் உறுதி நிலையை உணர்ந்து கொண்டு இறைவனையும் மனதினில் நினைத்துக் கொண்டு சிந்துபாத் அதன் மீது ஏறி அமர்ந்தான். அந்த ஓடத்தில் தண்ணீரின் வேகம் மிகக் கடுமையாக இருந்தது. இன்னும் சொல்லப் போனால் தண்ணீர் செல்கின்ற திசையில் அந்த ஓடம் அடித்துச் செல்லப் பட்டது. எனினும் சிந்துபாத் இதுவரையில் தனக்கு உதவிய இறைவன் இனியும் உதவுவான் என்ற நம்பிக்கையில் துணிந்து சென்று கொண்டு இருந்தான். துணிந்து சென்ற சிந்துபாத்தை அந்த ஓடம் ஒரு மலைக்கு அடியில் ஓரிடத்தில் உள்ள பெரிய குகை வழியாகச் சென்று கடைசியில் ஒரு சுரங்கத்தில் கொண்டு சென்று சேர்த்தது. அந்த சுரங்கத்தை கடந்து செல்ல வேண்டுமானால் அந்த ஓடத்தில் படுத்துத் தான் செல்ல வேண்டும். வேறு வழியே இல்லை. எனினும் அந்த ஓடம் ஒல்லியான உடல் அமைப்பைக் கொண்ட சிந்துபாத் படுக்கும் அளவிற்குப் போதுமானதாக இருந்தது. எனவே சிந்துபாத் அந்த குகைக்குள் ஆமை போல அந்த ஓடத்தில் தனது உடலை சுருக்கி படுத்துக் கொண்ட படி சென்றான். உள்ளே இருள் நிறைந்து காணப்பட்டது. தன்னை அந்தக் குகை எங்கு கொண்டு செல்லப் போகிறது என்பது சிந்துபாத்திற்கே தெரியாது. எனினும் கூட சிந்துபாத் இறைவனின் மீது தான் கொண்ட நம்பிக்கையால் துணிந்து சென்றான். சிந்துபாத்தை அந்த ஓடம் சுரங்கத்தின் மறு பக்கம் கொண்டு சென்று பத்திரமாக விட்டது. கண்களை மூடி அதிர்ச்சியில் உறைந்து இருந்து சிந்துபாத் எல்லாமே இறைவனின் சித்தப்படியே நடக்கட்டும் என்ற எண்ணத்தில் அப்படியே தூங்கியும் விட்டான். சிந்துபாத் கண்களைத் திறந்து பார்த்த சமயத்தில் ஒரு தீவில் சென்று ஒரு மரத்தில் இடித்த வண்ணம் ஓடம் நின்று கொண்டு இருந்தது. அதுவும் தீவின் மறுபக்கம் தான். ஆனால் அங்கு மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. அங்கு அபிசீனியர்கள், ஆப்ரிக்க மக்கள், இந்தியர்கள் என அனைவரும் கூடிக் குழுமி இருந்தனர். சிந்துபாத்திடம் அவர்கள் எதை எதையோ  கேட்டனர். ஆனால், சிந்துபாத்துக்குத் தான் அவர்கள் பேசிய மொழி ஒன்றுமே புரியவில்லை.

அவர்கள் பேசியது எதையுமே புரிந்து கொள்ள முடியாத நிலையில் விழித்துக் கொண்டு இருந்த சமயத்தில் அவர்களில் அரபு மொழி தெரிந்த ஒருவன் சிந்துபாத்திடம்," சகோதரனே! இந்த ஆற்றிற்கு எப்படி வந்தாய்? மேலும் இந்த மலைக்கு அப்பால் இருந்து இதுவரையில் யாருமே இந்தப் பக்கம் வந்தது இல்லை. நீ வந்தது எங்களுக்கு உண்மையில் ஆச்சர்யத்தை தான் அளிக்கிறது" என்று கூறவும், சிந்துபாத் நிதானமாக தன்னைப் பற்றி அவர்களிடம் கூறி முடித்தான். சிந்துபாத்தின் கதையை கேட்ட அங்கிருந்த அனைவரும் அவனுக்காகப் பரிதாபப்பட்டனர். மீண்டும் சிந்துபாத் அவர்களிடம்," நீங்கள் அனைவரும் யார்? இங்கு என்ன வேலை செய்து கொண்டு இருக்கின்றீர்கள்?" என்று கேட்டான். அதனைக் கேட்ட அவர்கள் சிந்துபாத்திடம் மறுமொழியாக," நாங்கள் அனைவரும் விவசாயிகள். எங்களது வயல்களுக்கும், தோட்டங்களுக்கும் இந்த ஓடைத் தண்ணீரைப் பாய்சசுவதற்காக இங்கு வந்தோம்" என்று கூறினார்கள்.

அத்துடன் அவர்கள் சிந்துபாத்தின் பசியையும் போக்கினார்கள். அதனால் சிந்துபாத் தெம்படைந்தான். பின்னர் பக்கத்தில் இருந்த ஒரு மரத்தின் நிழலுக்கு சிந்திப்பாத்தை அழைத்துச் சென்றார்கள். அங்கு சிறிது நேரம் சிந்துபாத் நன்றாக ஓய்வு எடுத்தான்.  பின்னர் சிந்துபாத் அவ்விடத்திற்கு வந்து இருப்பதை தங்கள் மன்னரிடம் தெரிவிக்க சிந்துபாத்தை அழைத்துக் கொண்டு அரண்மனையை அடைந்தார்கள் விவசாயிகள். அவ்விடத்தை ஆண்ட அரசரின் பெயர் "சரண் தீப்" அவர் ஒரு சிற்றரசர். எல்லோரிடமும் நல்ல படியாகப் பழகும் இயல்பு உடையவர். யாரையும் வெறுக்காதவர். யார் வேண்டுமானாலும் அவரை எளிதில் பார்த்து விடலாம். அவ்வளவு எளிமை வாய்ந்தவர்.

இந்நிலையில் மன்னர் "சரண் தீப்" ஏற்கனவே தான் பார்த்து மகிழ்ந்த விவசாயிகளுடன் புதிதாக வந்து இருந்த நபரைக் கண்டு விசாரித்தார். அவர்களும் சிந்துபாத் பற்றிய அனைத்து விஷயங்களையும் மன்னரிடம் கூறினர். சிந்துபாத்தும் தனது பயண அனுபவங்கள் அனைத்தையும் மன்னரிடம் தெரிவிக்க. அதனை அரபு மொழி தெரிந்தவர்கள், அப்படியே மன்னரிடம் மொழி பெயர்த்தனர். மன்னர் "சரண் தீப்" அதனைக் கேட்டு வியந்தார். எனினும் சிந்துபாத் கூறியதை மன்னரால் நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. ஏனெனில் சிந்துபாத் சொன்ன அனைத்திற்கும் அவன் கொண்டு வந்த ரத்தினக் கற்களும், அவன் பயணித்த ஓடமுமே சாட்சி. அதனையும் விவசாயிகள் மன்னரிடம் கொண்டு சென்று காண்பித்தார்கள். அதனைக் கண்டு சிந்துபாத்தின் துணிகரச் செயலை பாராட்டினார் மன்னர்.

மறுபுறம் சிந்துபாத் தம்முடன் கொண்டு வந்த ஆபரணக் கற்கள், அம்பர் போன்ற மணமிகு பொருட்கள் போன்றவைகளை மன்னருக்குப் பரிசாகக் கொடுக்கவும் மன்னர் அவைகளை ஏற்றுக் கொண்டு சிந்துபாத்துக்கு தம்முடைய பாராட்டுகளை தெரிவித்து மகிழ்ந்தார். அத்துடன் சிந்துபாத்திற்கு நல்ல தங்கும் இட வசதி, உணவுக்கு வேண்டிய ஏற்பாடுகள் இவை அனைத்தையும் நல்ல முறையில் செய்து கொடுத்துத் தினமும் அவரை அரண்மனைக்கு வந்து போக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மன்னர் தம்மை மதித்து இப்படிக் கூறியதால் சிந்துபாத் தினமும் மாலை வேளையில் மன்னரின் ஓய்வு நேரத்தில் அவரைக் காணச் சென்று வந்தார். அத்துடன் மன்னருக்கு அரபு மொழியையும் கற்றுக் கொடுத்தார்.

இதர நேரத்தில் அரசரால் தனக்குக் கொடுக்கப்பட்ட வீட்டில் உணவுண்டும், உறங்கியும் சிந்துபாத் நேரத்தை பாழாக்க விரும்பாமல், தான் பார்த்து மகிழ வேண்டிய இடங்களை எல்லாம் பார்த்து வருவதற்கு சென்று விடுவார். அந்தத் தீவு முழுவதும் மலைகளும், பள்ளத்தாக்குகளும் நிறைந்து காணப்பட்டன. அந்தத் தீவில் இருந்து மூன்று மைல் தொலைவில் உள்ள மலைகளில் பலவிதமான மாணிக்கக் கற்களும், தாதுப் பொருட்களும் காணக் கிடைத்தன. அத்துடன் ஆபரணக் கற்கள் அந்த மலையில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டு நவீன வடிவில் செய்யப்பட்டன. மனதிற்கு மகிழ்ச்சி தரும் அந்த மலைகளில் ஏறிச் செல்வதும் மாலை வேளையில் மன்னரைச் சென்று பார்ப்பதுமாக சிந்துபாத் அங்கு வாழ்ந்து வந்தார். சரண் தீப் மன்னர் சிந்துபாத்தின் நல்ல ஒழுக்கத்தாலும் கூர்மையான அறிவாலும் மிகவும் கவரப்பட்டார்.

ஒரு நாள் மன்னர், சிந்துபாத்தின் நாட்டு அரசாங்கம் பற்றியும் மன்னர் கலீபாவின் ஆட்சியின் சிறப்பு பற்றியும் கேட்டு அறிந்து மகிழ்ந்தார். அதன் பின்னர் சிந்துபாத் ஊர் செல்லும் சமயத்தில் பாக்தாத் மன்னருக்குத் தாம் பரிசுகளைத் தந்து அனுப்புவதாகவும், அவைகளைத் தம்முடைய சார்பாகக் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இப்படியாக மன்னர் சரண் தீப்பின் விருந்தாளியாகவும் நண்பராகவும் நீண்ட நாள் தங்கி இருந்த சிந்துபாத், ஒரு நாள் வர்த்தகர்கள் சிலர் பாக்தாத்திற்குப் புறப்பட ஆயத்தமானதைக் கேள்வியுற்றுத் தாமும் போக விரும்புவதாக மன்னரிடம் கூறவும். அதனை ஏற்றுக் கொண்ட மன்னர் பழைய நண்பனை பிரிய மனம் இல்லாமல் இருந்தாலும், சிந்துபாத்தின் வேண்டுகோளை ஏற்று அவன் பாக்தாத் புறப்பட சம்மதம் தெரிவித்தார்.

பின்னர் மன்னர் பாக்தாத் செல்ல இருக்கும் வர்த்தகர்களை வர வழைத்து சிந்துபாத்திற்கு உரிய கட்டணத்தையும் அவரே கொடுத்து சிந்துபாத்தையும், அவனது பொருட்களையும் பத்திரமாகக் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்று கூறினார். அது மட்டும் அல்லாமல் சிந்துபாத் புறப்படும் சமயத்தில் அவனுக்கு நிறைய பரிசுப் பொருட்களை கொடுத்து மகிழ்ந்ததோடு, மன்னர் கலீபாவுக்குத் தாம் சிந்துபாத் மூலம் கொடுத்தனுப்பும் பரிசுப் பொருட்களையும் கவனமாகக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கப்பல் தலைவரிடமும், வணிகர்களிடமும் கட்டளை பிறப்பித்தார்.  அதன் படியே கப்பல் தலைவன் சிந்துபாத்தையும் அவன் பொருள்களையும் கண் மணி போல பாதுகாப்பதாக ஒப்புக் கொண்டு புறப்பட்டான்.

அதே போல சிந்துபாத்தும் அனைவரிடமும் விடை பெற்று, மன்னர் பெருமானை ஆறத் தழுவி பிரிய மனம் இல்லாவிட்டாலும், கடமைகள் தன்னை அழைப்பதால் வேறு வழி இன்றி பாக்தாத் நகரம் நோக்கிய தனது கப்பல் பயணத்தை மேற்கொண்டான். கப்பல் பயணம் எந்த விதமான பிரச்சனையும் இன்றி இனிதாக நடந்தது. இறுதியில் கப்பல் பாக்தாத் நகரத்தை அடைந்தது. தனது பொருள்களுடன் வந்து இறங்கிய சிந்துபாத் தனது இல்லத்தை அடைந்து ஓய்வு எடுத்த பின்னர் கலீபா அவர்களை சந்தித்து மன்னர் சரண் தீப் தன்னிடம் கொடுத்த பரிசுகள் அனைத்தையும் அவரிடம் கொடுத்து மகிழ்வித்தான். அதனைப் பார்த்த மன்னர் சிந்துபாத்தை வெகுவாகப் பாராட்டினார். அத்துடன் சிந்துபாத்திற்கு பதில் மரியாதையையும் செய்தார். அன்றில் இருந்து அந்த ஊரிலேயே சிந்துபாத் பெரிதும் மதிக்கப்பட்டான். அவனுக்கு பாக்தாத்தின் மன்னரின் ஆதரவும் கிடைத்தது. மேலும், முன்பு சிந்துபாத் தவற விட்ட வணிகப் பொருள்களும் தெய்வாதீனமாக சிந்துபாத்திடமே வந்து சேர்ந்தது. அது எப்படி எனில், சிந்துபாத் உயிருடன் இருப்பதை அறிந்த வணிகர்கள் அவனிடம் தாமாகவே வந்து நியாயப்படி அவனுக்கு சேர வேண்டிய பொருள்களை ஒப்படைத்தனர்.  இப்படியாக சிந்துபாத் பெரும் செல்வத்தைக் கொண்டு காணப்பட்டான். வழக்கம் போல வெள்ளிக் கிழமைகளில் ஏழை எளிய மக்களுக்கு விருந்து அளித்து மகிழ்ந்தான். இப்படியாக சிந்துபாத்தின் நான்காவது கப்பல் பயணமும் இனிதே முடிந்தது.