சிந்துபாத்தின் ஆரம்ப கால வாழ்க்கை
~~page_heading~~சிந்துபாத்தின் ஆரம்ப கால வாழ்க்கை
இவ்வாறு ஷாரஜாத் அலிபாபாவின் கதையை பல இரவுகள் தொடர்ந்து சொல்லி முடித்தாள். அதனைக் கேட்ட மன்னர் மகிழ்ந்தார்.
பிறகு சிறிது நேரம் கழித்து ஷாரஜாத்திடம் மன்னர் "இதை விட ஒரு அற்புதமான கதை இருந்தால் சொல்லேன்!" என்று கேட்டார்.
அதனைக் கேட்ட ஷாரஜாத்,"மன்னரே இதை விட ஒரு அற்புதமான கதையை சொல்கிறேன் கேளுங்கள். நான் சொல்லப் போகும் கதையில் வரும் சிந்துபாத்தின் வீரதீரச் செயல்களை கேட்டால் நிச்சயம் தாங்கள் வியந்து விடுவீர்கள்" என்று கூற.
"உடனே அந்தக் கதையையும் கூறு" என்று கேட்டுக் கொண்டார் மன்னர்.
ஷாரஜாத்தும் கடலோடி சிந்துபாத்தின் ஆபத்தான கடற்ப் பயணங்களை கொண்ட அந்த சுவாரஸ்யமான கதைத் தொகுப்பை இவ்வாறு சொல்லத் தொடங்கினாள்.
சிந்துபாத்தின் ஆரம்ப கால வாழ்க்கை:
பாக்தாத் நகரத்தில் ஆயிஷா, ஆஸிம் என்ற தம்பதியர்கள் வாழ்ந்து வந்தனர். ஆஸிம் ஒரு வணிகன். "திரை கடல் ஓடியும் திரவியம் தேடு" என்ற பலமொழிக்கு ஏற்ப பல நாடுகளுக்கு சென்று வியாபாரம் செய்து அதன் மூலம் எண்ணற்ற பொருள்களை சம்பாதித்தான். பாக்தாத் நகரத்திலேயே விரல் விட்டு எண்ணக் கூடிய மிகப் பெரும் பணக்காரர்களுள் ஆஸிமும் ஒருவன். இறைவன் ஆஸிமுக்கு செல்வத்தில் ஒரு குறையும் வைக்கவில்லை. ஆனால் வாழ்க்கையில் ஒரு பெரும் குறையை வைத்து இருந்தான். ஆம்! ஆயிஷா, ஆஸிம் தம்பதிகள் இருவருக்கும் திருமணமாகி பத்து ஆண்டுகள் கழிந்தும் குழந்தை வரம் கிட்டவில்லை என்பது தான் அந்தப் பெரும் குறை. அப்பெரும் குறையை தீர்க்க ஆயிஷா, ஆஸிம் தம்பதியர் பல புனிதத் தலங்களுக்கு சென்றனர். இறுதியில் எருசலேமில் இருந்த புகழ் பெற்ற மசூதிக்கு வந்து சேர்ந்தனர். அங்கு தங்களால் ஆன தான தர்மங்களை செய்து மகிழ்ந்தனர். அந்த ஊரில் இருந்து கிளம்பும் சமயத்தில் பாபாஜான் என்ற மிகப் பெரும் சுஃபி துறவியை சந்தித்தனர். அவரிடம் கண்கள் கலங்க தம்பதியர் இருவரும் தங்களின் குறையை எடுத்துக் கூறி அழுதனர். பாபாஜான் அவ்வூரிலேயே மிகவும் மதிக்கத்தக்க ஞானி. அவர் அனைத்து சாஸ்திரங்களையும் அறிந்தவர். இன்னும் சொல்லப் போனால் அவரை ஜெருசலேமின் ஒரு ஜாதிப் பிரிவினர் இறைத் தூதராகவே நினைத்தே வழிபட்டனர்.
ஆயிஷா, ஆஸிம் ஆகிய இந்த இரு தம்பதிகளின் குறையையும் கேட்ட பாபாஜான் இறைவனை மனதில் நினைத்து கண்களைத் திறந்தவராக அவர்களிடம் "நீங்கள் அழ வேண்டாம். உங்கள் அழுகைக் காலங்கள் எல்லாம் முடிந்து விட்டது. விரையில் இறைவன் உங்களுக்கு புத்தியும், பலமும், நிறைந்த உடன் அதிர்ஷ்டமும் கொண்ட ஒரு ஆண் குழந்தையை தர இருக்கிறான்" என்ற நல்ல செய்தியை சொல்லி விட்டு நகர்ந்தார். அந்த வார்த்தையை கேட்ட தம்பதியர் இருவரும் மகிழ்ந்தனர். அந்த மகிழ்ச்சியுடன் மீண்டும் பாக்தாத் நகரம் திரும்பினர்.
சில மாதங்கள் கழிந்தது பாபாஜான் சொன்னபடியே ஆயிஷா ஒரு அழகான ஆண் குழந்தையை பெற்று எடுத்து ஆசிமின் கைகளில் ஒப்படைத்தாள். அத்துடன் அந்தக் குழந்தையை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு மரணித்தாள். ஆயிஷாவின் பிரிவை ஆசிமினால் தாங்க இயலவில்லை. ஆஸிம் ஒரு கணம் "ஏதேனும் செய்து தாமும் இறந்து விடலாமா?" என்று கூட யோசித்தான். எனினும் தனக்குப் பிறந்த குழந்தையை நல்ல படியாக வளர்க்கும் பொறுப்பு அவனுக்கு இருந்ததால் அக்குழந்தைக்காக வாழத் தொடங்கினான். மேலும் அப்பிள்ளைக்கு சிந்துபாத் என்று பெயரிட்டு வளர்த்து வந்தான்.
சிந்துபாத் பார்ப்பதற்கு அழகாகவும், சற்றே மெலிந்த திரேகத்துடன் காணப்பட்டாலும் மிகவும் பலசாலியாகவும், அறிவாளியாகவும் திகழ்ந்தான். எதையும் ஒரு முறை பார்த்த மாத்திரத்திலேயே மனதில் பதித்துக் கொண்டான். தாராள மனதுடன் இருந்தான். அவனது மறைந்த தாயார் ஆயிஷாவைப் போலவே ஏழைகளுக்கு வாரி வழங்கும் வள்ளலாக இருந்தான். ஆனால், அதே சமயத்தில் அவனிடம் அதிகம், அதிகமாக விளையாட்டு புத்தியும் இருந்தது. தாய் இல்லாப் பிள்ளை என்ற பாசத்தில் ஆஸிம் அவனை ஒரு நாள் கூட அடித்தது இல்லை. சிந்துபாத்திற்காக அவன் இன்னொரு திருமணத்திற்கும் சம்மதிக்க வில்லை. இதனால் சிந்துபாத் சிறு வயதில் இருந்தே மிகவும் ஆடம்பரமாக வளர்ந்தான். அத்துடன் அவனுக்கு கஷ்டம், எளிமை என்ற வார்த்தையின் பொருள் கூடத் தெரியவில்லை. தனது விருப்பம் போல செல்வத்தை தண்ணீராக செலவழித்தான். இன்னும் சொல்லப் போனால் "குன்றித் தின்னால் குன்றும் காணாது" என்ற பழமொழி அவனுக்குப் புரியவில்லை. இந்நிலையில் சிந்துபாத்தின் தந்தை ஆஸிம் காலமானார். இப்போது சிந்துபாத்தை கேட்கவும் ஆள் இல்லை. வரவை மீறி செலவு செய்து வந்தான். அதிகப்படியான செலவுகள் கடைசியில் எதில் கொண்டு போய் விடும் என்று சொல்லத் தேவை இல்லை. ஒரு பழமொழி சொல்வார்கள், செக்களவு பொன் இருந்தாலும், செதுக்கிச் செதுக்கித் தின்றால் எத்தனை காலத்திற்கு வரும் என்று. அதே கதை தான். வருமானம் இல்லா விட்டால் என்ன செய்ய முடியும்? உழைக்காமல் எத்தனை நாட்கள் உண்ண முடியும்? உயர்ந்த வகை ஆடைகளை உடுத்திட முடியும்? ஆம்! கடைசியில் அது தான் நடந்தது தனது ஈகைப் பண்பாலும், அதிகப்படியான செலவுகளாலும் எல்லா செல்வங்களையும் இழந்து விட்டான் சிந்துபாத். அதன் விளைவு மாளிகை கூரை வீடாக மாறியது. தங்கத் தட்டுக்கள் மற்பாண்டமாய் மாறிப் போயின. முன்பு தேடித் தேடி வந்த உறவுகள் அனைத்தும் இப்போது வறண்ட குளத்தை பார்க்க விரும்பாத பறவைகள் போல ஓடி ஒழிந்தன.
சிந்துபாத்துக்கு அப்போது தான் வாழ்க்கை புரிந்தது. "துன்பம்" என்ற சொல்லை ஏட்டில் மட்டுமே படித்தவன் இப்போது முதன் முறையாக அதனை அனுபவத்தில் கண்டான். தந்தை ஆசானாக இருந்து சொல்லித் தர வேண்டிய பல உண்மைகளை அவனது அனுபவம் என்ற ஆசான் மூலமாக குறுகிய காலத்தில் சிந்துபாத் கற்றுத் தேர்ந்தான். இறுதியாக கப்பல் கட்டுபவர்களிடம் வேலைக்கு சேர்ந்தான். எதையும் பார்த்தவுடனேயே கற்றுத் தேர்ந்து விடும் அறிவு கொண்ட சிந்துபாத் விரைவில் கப்பல் கட்டும் தொழில் நுட்பத்தை கற்றுத் தேறினான். இப்போது அவனே தனியாகச் சென்று கப்பலைகளை சொந்தமாகக் கட்டி விற்கத் தொடங்கினான். முதலில் சிறு, சிறு கப்பல்களை செய்து விற்றவன். இப்போது வருவாய் பெருகியதன் காரணமாக சில பெரிய கப்பல்களையும் செய்து விற்றான். அதனால் கையில் கொஞ்சம் அதிகமாகவே காசு புரண்டது. அதைக் கொண்டு ஒரு மிகப் பெரும் மாளிகையை கட்டிக் கொண்டான். தந்தை காலத்தில் சேர்த்து வைத்த சொத்துக்கள் அனைத்தையும் மீண்டும் மீட்டு எடுக்க வேண்டும் என்ற எண்ணம் சிந்துபாத்தின் மனதில் நிழல் ஆடியது. அது கனவாய் அவனைத் தூங்க விடாமல் நச்சரித்தது. அதன் விளைவு தனது தந்தையைப் போலவே சிந்துபாத்தும் கடல் கடந்து வியாபாரம் செய்ய வேண்டும் என்று ஆசை கொண்டான்.
சிந்துபாத்தின் கப்பல் கட்டும் தொழில் நன்றாக வளர்ந்ததால் எண்ணற்ற செல்வந்தர்களின் அறிமுகம் அவனுக்குக் கிடைத்தது. அத்துடன் அவன் கேட்டால் கடனாக அவனை நம்பி எத்தனை தினார்களை வேண்டும் ஆனாலும் அள்ளிக் கொடுக்க பிரபுக்கள் காத்திருந்தனர். அத்துணை நம்பிக்கையை சிந்துபாத் குறுகிய காலத்திலேயே அவ்வூர் உயர் குடி பிரப்புக்களிடம் இருந்து பெற்றுவிட்டான். தான் கஷ்டப்பட்டு உருவாக்கிய கப்பல் கட்டும் தொழிற்சாலையை தனக்கு வேண்டிய ஒரு உயர் குடிப் பிரபுவிடம் ஒப்படைத்து விட்டு அவரிடம் இருந்து அதற்கு ஈடாக எண்ணற்ற பொற்காசுகளை பெற்றான் சிந்துபாத். தான் பெற்ற பொற்காசுகளைக் கொண்டு வர்த்தகத்துக்கு தேவையான எண்ணற்ற அறிய பொருள்களை வாங்கிக் கொண்டு அதனை வெளி நாட்டில் நல்ல விலைக்கு விற்க வேண்டி தனக்கு அறிமுகமான சில வியாபாரிகளுடன் தனது முதல் கப்பல் பயணத்திற்கு ஆயத்தம் ஆனான் சிந்துபாத்.
