சித்திரகூடப் படலம் - 2182
இலக்குவன் அமைத்த சாலையில் இராமன்
குடிபுகல் (2182-2183.)
இராமன் சாலையில் சீதையோடு குடி புகுதல்
2182.
இன்னணம் இளையவன் இழைத்த சாலையில்,
பொன் நிறத் திருவொடும் குடி புக்கான் அரோ! -
நல் நெடுந் திசைமுகன் அகத்தும், நம்மனோர்க்கு
உன்ன அரும் உயிருளும், ஒக்க வைகுவான்.
இன்னணம் - இவ்வாறு; இளையவன் இழைத்த சாலையில் -
இலக்குவன் செய்துஅமைத்த சாலையில்; நல் நெடும் திசை முகன்
அகத்தும் - நல்ல பெரிய பிரமதேவனதுநெஞ்சத்திடத்தும்;
நம்மனோர்க்கு - நம்மை ஒத்தவர்களுக்கு; உன்ன அரும்உயிருளும் -
நினைத்தற்கரிய உயிரினுக்குள்ளும்; ஒப்ப - ஒரு தன்மையாக; வைகுவான்-
என்றும் நீங்காது உடன் உறைகின்ற பரம்பொருளாகிய இராமன்;
பொன்நிறத்திருவொடும் குடி புக்கான் - பொன்னிறம் படைத்த
இலக்குமியின் அவதாரம் ஆகியசீதையோடும் குடி புகுந்தான்.
பிரமன் நெஞ்சிலும், உயிரிலும் உறைபவன் இச் சிறிய சாலையில்
அவதார நிமித்தம் குடிபுகுந்தான் என்றது அரியனாய் எளியனாம் அவனது
சௌலப்பயத்தைக் காட்டியது. ‘அரோ’அசை. 48
