சித்திரகூடப் படலம் - 2177
இராமன் இலக்குவன் அமைத்த சாலையை அடைதல்
இலக்குவன் அமைந்த குடிலில் இராமன் சீதையோடு குடிபுகுதல்
2177.
மாலை வந்து அகன்றபின், மருங்கு இலாளொடும்,
வேலை வந்து உறைவிடம் மேயது ஆம் என,
கோலை வந்து உமிழ் சிலைத் தம்பி கோலிய
சாலை வந்து எய்தினான், தவத்தின் எய்தினான்.
தவத்தின் எய்தினான் - தவம் காரணமாகக் காடு நோக்கி வந்த
இராமன்; மாலைவந்து அகன்றபின் - மாலைப் பொழுது வந்து சென்ற
பிறகு (இரவில்); வேலை உறைவிடம்வந்து மேயது ஆம் என -
கடலானது தான் தங்கும் இடத்தை வந்து சேர்ந்தது என்று
சொல்லும்படியாக; மருங்கிலாளொடும் - இடையில்லாத சீதையோடும்;
கோலை வந்து உமிழ் சிலைத் தம்பி - அம்பை உமிழுகின்ற வில்லை
உடைய தம்பியாகிய இலக்குவன்; கோலிய - செய்தமைத்த; சாலை வந்து
எய்தினான் - சாலை இருக்கும் இடத்தைவந்தடைந்தான்.
நீலக்கடல் போன்ற நிறம் உடையவன் இராமன் ஆதலின், கடல் தன்
உறைவிடம் போனதுபோல என்று உவமைப்படுத்தினார். 43
