சித்திரகூடப் படலம் - 2175
2175.
மந்தியும் கடுவனும் மரங்கள் நோக்கின;
தந்தியும் பிடிகளும் தடங்கள் நோக்கின;
நிந்தை இல் சகுந்தங்கள் நீளம் நோக்கின;
அந்தியை நோக்கினான், அறிவை நோக்கினான்.
மந்தியும் கடுவனும் மரங்கள் நோக்கின - (இரவு நேரம் வருதலின்
ஏறி உறங்க)பெண் குரங்கும் ஆண் குரங்கும் மரங்களைப் பார்த்தன;
தந்தியும் பிடிகளும் தடங்கள்நோக்கின - ஆண் யானையும் பெண்
யானையும் தம் இருப்பிடத்துக்குச் சென்று சேரும்வழிகளைப் பார்த்தன;
நிந்தை இல் சகுந்தங்கள் நீளம் நோக்கின- பழிப்பு இல்லாதபறவைகள்
தம் கூடுகள் உள்ள நீண்ட வழியைப் பார்த்தன; அறிவை நோக்கினான் -
மெய்ப்பொருளை நோக்கி அறிதற்கு உரிய இராமன்; அந்தியை
நோக்கினான் - மாலைக்காலத்தில் செய்தற்கு உரிய கடமைகளைச்
செய்யத் தொடங்கினன்.
குரங்குகள் இரவில் மரத்தின்கண் உறங்கல் இயல்பு; பறவைகள் தம்
கூட்டை அடைதலும், யானைமுதலியன தம் இருப்பிடத்தை நாடிச் சேறலும்
மாலை நேரத்தில் நிகழ்வன. தடம் -வழி. 41
