சித்திரகூடப் படலம் - 2171
இராமன் அந்தணரின் விருந்தினன்ஆதல்
2171.
இனைய யாவையும் ஏந்திழைக்கு
இயம்பினன் காட்டி,
அனைய மால் வரை அருந் தவர்
எதிர்வர, வணங்கி,
வினையின் நீங்கிய வேதியர்
விருந்தினன் ஆனான் -
மனையில் மெய் எனும் மா தவம்
புரிந்தவன் மைந்தன்.
மனையில் - அரண்மனையில்; மெய் எனும் மாதவம் புரிந்தவன்
மைந்தன் -சத்தியம் என்னும் பெரிய தவத்தைச் செய்தவனாகிய
தயரதனுடைய மகனாகிய இராமன்; இனையயாவையும் - இப்படிப்பட்ட
சித்திரகூட மலையின் பண்பு நலங்களை யெல்லாம்; ஏந்து இழைக்கு -
உயர்ந்த அணிகலக்களை உடையாளாய சீதைக்கு; இயம்பினன் காட்டி -
சொல்லிக் காண்பித்து; அனைய மால் வரை - அந்தப் பெரிய சித்திரகூட
மலையின்; அருந்தவர் - அரிய முனிவர்கள்; எதிர்வர - (தன்னை)
எதிர்வந்து வரவேற்க; வணங்கி - (அவர்களை) வழிபட்டு; வினையின்
நீங்கிய - தவத்தால் இரு வினையில்இருந்து நீங்கியவர்களாகிய;
வேதியர் - அந்த வேதியர்களுக்கு; விருந்தினன்ஆனான் -.
வனம் சென்று தவம் செய்வாரினும் தயரதன் மேம்பட்டவன் என்பது
காட்ட ‘மனையின் மெய்எனும் மாதவம் புரிந்தவன்’ என்றார். 37
