சித்திரகூடப் படலம் - 2168
2168.
‘ஐவனக் குரல், ஏனலின்
கதிர், இறுங்கு, அவரை
மெய் வணக்குறு வேய் இனம்
ஈன்ற மெல் அரிசி,
பொய் வணங்கிய மா தவர்
புரைதொறும் புகுந்து, உன்
கை வணத்த வாய்க் கிள்ளை தந்து
அளிப்பன - காணாய்!
உன் கை வணத்த வாய்க் கிள்ளை - (சீதையே!) உன் கை போன்ற
செந்நிறவாயினையுடைய கிளிகள்; ஐவனக் குரல் - மல நெல் கதிர்;
ஏனலின் கதிர் -தினைக் கதிர்; இறுங்கு - சோளக் கதிர்; அவரை -
அவரைகள்; மெய்வணக்குறு வேய் இனம் ஈன்ற மெல் அரிசி -
உடலால் வளைவு பொருந்திய மூங்கிலிற் பிறந்தமென்மையான அரிசி
ஆகியவற்றை; பொய் வணங்கிய மாதவர் - பொய்யை ஓட்டிய
முனிவர்களது; புரைதொறும் - ஆசிரமக் குடில்கள் தோறும்; புகுந்து -
நுழைந்து; தந்து அளிப்பன- கொடுத்து அன்பு செய்வனவற்றை; காணாய்-.
வணங்கி - வணங்கச் செய்த - இங்குத் தோல்வியைக் குறித்தது;
பொய்யைத் தோற்கடித்தமுனிவர்கள். கிளிகள் முனிவர்களுக்கு உணவு
கொண்டுவந்து அன்புடன் கொடுத்து உதவுகின்றனஎன்றாராம். 34
