சித்திரகூடப் படலம் - 2163
2163.
‘வளைகள் காந்தளில் பெய்தன
அனைய கைம் மயிலே!
தொளை கொள் தாழ் தடக்
கைந் நெடுந் துருத்தியில் தூக்கி,
அளவு இல் மூப்பினர் அருந்தவர்க்கு,
அருவி நீர் கொணர்ந்து,
களப மால் கரி குண்டிகைச்
சொரிவன - காணாய்
வளைகள் காந்தளில் பெய்தன அனைய கை மயிலே! -
வளையல்களைக் காந்தள் மலரில்இட்டு வைத்தாற் போன்ற கைகளை
உடைய மயில் போல்பவளே!; மால் கரிக் களபம் -பெரிய யானைக்
குட்டிகள்; அளவு இல் மூப்பினர் அருந்தவர்க்கு - அளவுபடாத முதுமை
உடையவர்களாய அரிய தவ முனிவர்களுக்கு; அருவி நீர் - அருவியில்
உள்ள நீரை; தொளை கொள் தாழ் தடக்கை நெடுந்துருத்தியில் -
துவாரத்தைக் கொண்ட தொங்குகிற பெரியதமது கையாகிய நீண்ட
தோல்பையிலே; தூக்கிக் கொணர்ந்து - முகந்து கொண்டு வந்து;
குண்டிகை - (அம்முனிவர்களது ) கமண்டலத்தில்; சொரிவன -
ஊற்றுவனவற்றை; காணாய் -.
காந்தள்- கைபோலும் அஃறினைப் பொருளாகிய யானைக் குட்டிகளும்
முனிவர்களது முதுமை கருதிஅவர்களுக்கு அருவி நீர் கொணர்ந்து
கமண்டலத்தில் ஊற்றுகின்றன என்று சித்திரகூட மலையின்பண்பு நலம்
கூறியதாம். களபம் - யானைக்கன்று. முப்பது வயதுடைய யானையைக்
குறிக்கும் என்பர். துருத்தி - தோல்பை. (தண்ணீர் முகக்க உதவும்.) 29
