சித்திரகூடப் படலம் - 2148
2148.
‘ஒருவு இல் பெண்மை என்று உரைக்கின்ற
உடலினுக்கு உயிரே!
மருவு காதலின் இனிது உடன்
ஆடிய மந்தி
அருவி நீர்கொடு வீச, தான்
அப் புறத்து ஏறி,
கருவி மா மழை உதிர்ப்பது ஓர்
கடுவனைக் - காணாய்!
ஒருவு இல் பெண்மை என்று உரைக்கின்ற உடலினுக்கு உயிரே-
நீங்காத பெண்மை என்று சொல்லப்படும் ஓர் உடலுக்கு உயிர் போலச்
சிறந்தவளே! மருவு காதலின் - மிகுந்தஅன்புடன்; இனிது - இன்பமாக;
உடன் ஆடிய மந்தி- ஆண் குரங்காகிய தன்னோடுநீராடிய பெண்குரங்கு;
அருவி நீர் கொடு வீச - அருவி நீரைக் கொண்டு (தன்மேல்) தூவ;
தான்- (ஆண் குரங்கு); அப்புறத்து ஏறி - மலையின் மற்றொரு பக்கத்தில்
மேல் ஏறி; கருவி மாமழை - தொகுதி கொண்ட பெரிய மேகத்தை;
உதிர்ப்பது -நீரைச் சிந்தச் செய்வதாகிய; ஓர் கடுவனை - ஓர்
ஆண்குரங்கை; காணாய் -.
நீராடுகிற போது மந்தி அருவி நீரைத் தூவ, கடுவன் மலைமேல் ஏறி
மேக நீரை அம்மந்திமேல் வீசி ஆண்மை காட்டியதென்க. கருவி -
தொகுதி எனப் பொருள்படும் உரிச்சொல் ‘கருவிதொகுதி’ (தொல். சொல்.
உரி. 56.) இங்குத் தொகுதியாவது இடி மின்னல் முதலியவற்றின்கூட்டம்,
பெய்யும் மேகம் என்றவாறாம். கடுவன் - ஆண் குரங்கு. மந்தி - பெண்
குரங்கு.இக்காலத்துப் பேர் உருவுடைய ஆண் குரங்கை ‘மந்தி’ - என
வழங்கல் உலகவழக்கு, 14
