சித்திரகூடப் படலம் - 2146
2146.
‘ஆடுகின்ற மா மயிலினும்
அழகிய குயிலே!
கூடுகின்றிலர், கொடிச்சியர்
தம் மனம் கொதிப்ப
ஊடுகின்றனர், கொழுநரை
உருகினர் நோக்கப்
பாடுகின்றன, கின்னர
மிதுனங்கள் - பாராய்!
ஆடுகின்ற மா மயிலினம் அழகிய குயிலே! - (கார் கண்டு
களிப்புற்றுத் தோகைவிரித்து) ஆடுகின்ற சிறந்த மயிலைக்காட்டிலும்
(சாயலால்) அழகுடைய குயில்போலும் குரல்உடையவளே!; கொடிச் சியர்-
குற மகளிர்; தம்மனம் கொதிப்ப ஊடுகின்றனர் -தம் மனம்
கொதிக்கின்றபடியால் (கணவர் மேல்) ஊடல் கொண்டவராய்;
கூடுகின்றிலர் -(கணவரைக்) கூடாமல் இருக்கின்ற அவர்; கொழுநரை -
தம் கணவரை; உருகினர் -(தாமே) அன்பினால் உருகியவர்களாய்க்
(கூடுதற்குறிப்பினால்); நோக்க -பார்க்கும்படி; கின்னர மிதுனங்கள் -
ஆணும் பெண்ணுமாய் இணைந்திருக்கும் கின்னரமிதுனங்கள்;
பாடுகின்றன-; பாராய்-.
ஊடலாற் பிரிந்த குறத்தியரைக் கணவர்பால் தம் பாடலாற் கின்னர
மிதுனங்கள் சேர்த்துவைப்பனவாயின என்பது கருத்து. கின்னர மிதுனம் -
மனித முகமும் குதிரை உடலும் புடைத்து ஆனும்பெண்ணுமாய் இணைந்தே
இருந்து கின்னரம் என்னும் இசைக்கருவி கொண்டு பாடும் தன்மை உள்ள
தேவசாதியினர். 12
