சித்திரகூடப் படலம் - 2144
2144.
‘உருகு காதலின் தழைகொண்டு
மழலை வண்டு ஓச்சி,
முருகு நாறு செந் தேனினை
முழைநின்றும் வாங்கி,
பெருகு சூல் இளம் பிடிக்கு ஒரு
பிறை மருப்பு யானை,
பருக, வாயினில், கையின்நின்று
அளிப்பது - பாராய்!
பிறை மருப்புஒரு யானை - பிறைமதி போன்ற தந்தத்தை உடைய
ஒரு களிற்றியானை;பெருகு சூல் இளம் பிடிக்கு -முதிர்ந்த
கருப்பத்தையுடைய இளைய (தன் பெண் யானைக்கு; உருகு காதலின்-
மனம் உருகுதற்குக் காரணமான அன்பினால்; தழைகொண்டு மழலை
வண்டுஓச்சி - தழைகளைக் கொண்டு இனிய குரல் உடைய வண்டுகளை
ஓட்டி; முருகு நாறு - மணம்வீசுகின்ற; செந்தேனினை- ; முழை
நின்றும் வாங்கி - மலைக் குகையிலிருந்தும்எடுத்து; வாயினில்பருக -
வாயால் பருகும்படி; கையின் நின்று -தனது கையிலிருந்து; அளிப்பது-
கொடுப்பதனை; பாராய் - காண்பாயாக.
சிறிதே வளைந்த தந்தம் பிறை மதி போலும், யானை இனங்களின்
அன்புச்செறிவைஇப்பாடல் மூலம் அறியலாம். “பெருகு மதவேழம்
மாப்பிடிக்கு முன் நின்று, இரு கண் இளமூங்கில்வாங்கி - அருகிருந்த,
தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம்”, “வரை செய் மாக்களிறு இள வெதிர
வளர்முளை அளைமிகுதேன் தோய்த்துப், பிரசவாரி தன்னிளம் பிடிக்கு
அருள் செய்யும் பிரிதி(திவ்ய.2256, 962.) என்னும் ஆழ்வார் திருமொழிகள்
இங்கு ஒப்பு நோக்கத்தக்கன. 10
