சாளுக்கிய சோழர்கள்
இராசராசசோழனின் தமக்கையான குந்தவையின் மகனுக்கும் முதலாம் இராசேந்திரனின் மகள் அம்மங்கா தேவிக்கும் பிறந்தவன் குலோத்துங்கன். மேலைச் சாளுக்கிய ஆதிக்க விரிவை எதிர்த்து வீரராசேந்திரன் போர் புரிந்த போதும் கடாரத்துக்குச் சோழப்படை சென்ற போதும் குலோத்துங்கன் அதில் பங்கு கொண்டிருந்தான். குழப்பம் மிகுந்து அரசனில்லாது சோழ நாடு தவித்தபோது அரசனாகி ஐம்பது ஆண்டுகள் சோழ நாடு சிதையாமல் காத்தவன் முதலாம் குலோத்துங்க சோழன்.
முதலாம் குலோத்துங்கனுடைய காலமும் பெரும் கிளர்ச்சிகளைக் கொண்ட காலப்பகுதியாகவே அமைந்தது. பாண்டிய நாட்டிலும், சேர நாட்டிலும் படை நடத்திக் கிளர்ச்சிகளை அடக்கவேண்டியிருந்தது. வட பகுதிகளிலும் போர் ஓய்ந்தபாடில்லை. எனினும் ஈழநாட்டில், விஜயபாகு என்பவன் சோழருடன் போரிட்டு ஈழத்திலிருந்து சோழர் ஆட்சியை அகற்றினான். ஈழத்தில், ஏறத்தாழ 70 ஆண்டுகள் நிலவிய சோழராட்சி அங்கிருந்து அகற்றப்பட்டது. சோழநாட்டின் பிற பகுதிகளில் நிலவிய நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, குலோத்துங்கன் ஈழநாட்டை மீட்கப் படைகளை அனுப்பவில்லை என்று கருதப்படுகின்றது.
குலோத்துங்கன் இயன்ற வரை பயனற்ற போரை ஒதுக்கினான். இராசராச சோழன் கைப்பற்றிய நாடுகள் அந்நாட்டு மன்னர்களின் முயற்சியாலும் குலோத்துங்கனின் அமைதிக் கொள்கையாலும் சோழர் கையை விட்டு நழுவின. குலோத்துங்கனின் இறுதிக் காலத்தில் தெற்கிலிருந்தும் வடக்கிலிருந்தும் பிரச்சினைகள் உருவாயின. சோழப் பேரரசு ஆட்டம் காணும் நிலை ஏற்பட்டது. வடக்கிலிருந்து வந்த படையெடுப்புகள் சோழநாட்டுக்குப் பெரும் சேதத்தை விளைவித்தன.
வெளிநாட்டுத் தொடர்புகள்:
முதலாம் இராசராசன் மற்றும் முதலாம் இராசேந்திரன் காலங்களிலேயே சீன நாட்டுடன் சோழ நாட்டிற்குத் தொடர்பு இருந்து வந்தது. குலோத்துங்கனும் தன் ஆட்சிக் காலத்தில் வாணிகத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள 72 பேர்களடங்கிய ஒரு தூதுக் குழுவைச் சீனத்திற்கு அனுப்பிவைத்தான். மேலும் கடாரம், சுமத்திரா போன்ற தீவுகளுடனும் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தான்.
ஆட்சிப் பணிகள்:
குலோத்துங்க சோழனின் ஆட்சியின் போது வரியை நீக்கினான். எனவே சுங்கம் தவிர்த்த சோழன் என அழைக்கப்பட்டான். இராசராசனின் ஆட்சிக்குப்பின் இவனது ஆட்சிக் காலத்தில் சோழ நாடு முழுவதையும் அளக்கும் பணி தொடங்கி இரு ஆண்டுகளில் முடிவுற்றது. நிலமளந்த செயல் இவனது ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த மற்றொரு சிறப்பான செயலாகும். இவன் சைவ சமயத்தைச் சேர்ந்தவனாக இருந்த போதும் வைணவ, சமண, பௌத்த சமயங்களையும் ஆதரித்ததாகக் கல்வெட்டு கூறுகின்றது. குலோத்துங்கனது அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர் செயங்கொண்டார். இவர் குலோத்துங்கனின் கலிங்க வெற்றியைப் புகழ்ந்து கலிங்கத்துப் பரணி இயற்றினார்.
சோழப் பேரரசின் வீழ்ச்சி:
முதலாம் குலோத்துங்கனுக்குப் பின்னர் அவனது மகனான விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன், இரண்டாம் இராசாதிராசன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகியோர் வரிசையாகச் சோழ நாட்டை ஆண்டனர். இக்காலத்தில் சோழர் தொடர்ந்து வலிமையிழந்து வந்தனர். நாட்டின் வடக்கில் ஒய்சாளர்களின் செல்வாக்கு உயர்ந்தது. குறுநில மன்னர்களும் ஆதிக்கம் பெற நேரம் பார்த்திருந்தனர். தெற்கே பாண்டியர்கள் வலிமை பெறலாயினர். உள்நாட்டுக் குழப்பங்களும் விளைந்தன.
1216 இல் ஆட்சிக்கு வந்த மூன்றாம் இராசராசன் காலத்தில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் தலைமையில் பாண்டியர்கள் கங்கைகொண்ட சோழபுரம் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றிக் கொண்டனர். எனினும், சோழர்களுக்கு ஆதரவாகப் போசள மன்னனான இரண்டாம் நரசிம்மன் சோழநாட்டில் புகுந்து பாண்டியர்களைத் தோற்கடித்து மன்னனைக் காப்பாற்றினான். மூன்றாம் இராசராசனுக்குப் பின்னர் கி.பி 1246 இல் மூன்றாம் இராசேந்திரன் மன்னனானான். இவன் காலத்தில் வலிமை பெற்ற பாண்டியர்கள் சோழர்களை வென்று அவர்களைச் சிற்றரசர்கள் நிலைக்குத் தாழ்த்தினர். மூன்றாம் இராசராசனுடன் பிற்காலச் சோழரின் பெருமை மங்கிப்போயிற்று.
