சங்கரதாசு சுவாமிகள்

சங்கரதாசு சுவாமிகள்

bookmark

வாழ்க்கை வரலாறு

தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழ் நாடக உலகின் தனிப்பெரும் தகைமையர்களாக விளங்கிய சிலருள் குறிப்பிடத்தக்கவர். கூத்து மரபிலிருந்து உருவாகி வளர்ந்த தமிழ் நாடக அரங்கம், பெட்டி அரங்க மரபிற்கேற்ப உருபெற்றது சங்கரதாஸ் சுவாமிகள் காலத்தில்தான். தமிழ் நாடகத் தலைமையாசிரியர் என அழைக்கப்படும் இவர் சுமார் 40 நாடகங்களை எழுதியுள்ளார். அவற்றில் இப்போது 18 நாடகங்களுக்கான பனுவல்களே கிடைத்துள்ளன. புதுச்சேரியில் அமைந்துள்ள இவரது சமாதி புதுவை அரசால் பாதுகாக்கப்படுகிறது.

வாழ்க்கைச் சுருக்கம் :

சங்கரதாஸ் சுவாமிகள், தூத்துக்குடிக்கு அருகிலுள்ள காட்டுநாய்க்கன்பட்டி என்னும் சிற்றூரில் இராமாயணப் புலவர் என அழைக்கப்பட்ட தாமோதரக் கணக்கப் பிள்ளை, பேச்சியம்மாள் இணையருக்கு மகனாக 1867 செப்டம்பர் 7 ஆம் நாள் பிறந்தார். பெற்றோர் இவருக்கு சங்கரன் எனப் பெயரிட்டனர்.

தொடக்கக் கல்வி தன் தந்தை தாமோதரனாரிடம் பெற்ற சங்கரதாசர், பின்னர் பழனியில் வாழ்ந்த தண்டபாணி சுவாமிகளிடம் பெற்றார். சங்க இலக்கியங்கள், நீதிநூல்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஆகியன போன்றவற்றைக் கற்றார். இதனால் வெண்பா, கலித்துறை, இசைப்பாடல்களான வண்ணம். சந்தம் ஆகியவற்றைப் பாடும் திறனைப் பெற்றார்.

சங்கரதாசர் தூத்துக்குடி உப்புப் பண்டகசாலையில் சிறிதுகாலம் கணக்கராகப் பணியாற்றினார். 1891 ஆம் ஆண்டில் தனது 24 ஆவது அகவையில் அப்பணியைத் துறந்து நாடகத்துறையில் ஈடுபட்டார்.

சாமி நாயுடு குழுவில் பணியாற்றும்பொழுது வாழ்க்கையில் வெறுப்புற்ற சங்கரதாசர் தன் வழிபாட்டு கடவுளாகிய முருகனின் அருள்வேண்டி அருட்செலவு (தீர்த்த யாத்திரை) மேற்கொண்டார். அரையில் மட்டும் உடையுடுத்தி அருட்செலவில் ஈடுபட்ட சங்கரதாசரை பலரும் சுவாமிகள் என அழைக்கத் தொடங்கினர். இதனால் அவர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் ஆனார்.

சங்கரதாசு சுவாமிகள் இலங்கைக்குச் சென்றிருந்த பொழுது, யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தில் அவரது முத்தமிழ்ப் புலமையை ஆராய அங்குள்ள புலவர்களால் வினாக்கள் தொடுக்கப்பட்டன. அவற்றிற்கு சங்கரதாசர் வழங்கிய விடைகளைப் போற்றிய அச்சங்கத்தினர் அவருக்கு வலம்புரிச் சங்கு ஒன்றைப் பரிசளித்தனர்.

மறைவு:

1921 ஆம் ஆண்டில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சங்கரதாசருக்கு வலதுகையும் இடதுகாலும் முடங்கிவிட்டன. வாய்திறந்து பேச இயலாது போய்விட்டது. இந்நிலையிலேயே 1922 நவம்பர் 13 ஆம் நாள் திங்கட்கிழமை இரவு புதுச்சேரியில் மரணமடைந்தார்.