கோவை சி.பி.சுப்பையா

கோவை சி.பி.சுப்பையா

bookmark

வாழ்க்கை வரலாறு

சி.பி.எஸ். என்று காங்கிரஸ் தொண்டர்களால் அழைக்கப்பட்ட சுப்பையா, 19 ஆகஸ்ட் 1895ஆம் ஆண்டு கோவை நகரில் பெரியண்ண முதலியார் மீனாட்சி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இளம் வயதில் அதாவது 1920 முதல் நடைபெற்ற அத்தனை போராட்டங்களிலும் கலந்து கொண்டவர் சுப்பையா. மகாத்மா காந்தியடிகளிடம் அளவற்ற பக்தியும், தேசப்பற்றும் மிகுதியாக உடையவர்.

தோற்றத்தில் மிகவும் மெலிந்தவர், மன உறுதியில் எஃகினைக் காட்டிலும் உறுதி படைத்தவர். இவர் அப்போதைய கோவை, ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் அடங்கிய காங்கிரஸ் குழுவுக்குச் செயலாளராக இருந்து ஏறக்குறைய எல்லா அனைத்திந்திய காங்கிரஸ் மாநாடுகளுக்கெல்லாம் சென்று வந்தவர். கோவை மாவட்டத்தில் கட்சிக்கு கிராமம் தோறும் கிளைகளைத் தோற்றுவித்தவர்.

1930இல் மகாத்மா காந்தி தண்டி யாத்திரை மேற்கொண்ட போது அந்த போராட்டம் நடைபெற்ற அனைத்து நாட்களும் சுப்ரி கோவையில் ஊர்வலங்களை நடத்தினார். இந்தப் போராட்டத்தில் சுப்ரி ஒரு வருஷம் கடுங்காவல் தண்டனை பெற்றார்.

சுப்ரி அவர்களுக்கு ஆன்மீகத்தில் அதிகம் நாட்டம் உண்டு. காந்தியடிகளின் சொற்பொழிவுகளை தமிழில் மொழிபெயர்க்கும் வேலையை இவர் செய்து வந்ததனால், இவரை ‘மை லெளட் ஸ்பீக்கர்’ என்றே காந்தி அன்போடு அழைத்தார். 1942இல் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் இவர் பாதுகாப்புச் சட்டத்தின்படி கைது செய்யப்பட்டு வேலூர், தஞ்சாவூர் சிறைகளில் தண்டனை அனுபவித்தார்.

இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் சி.ராஜகோபாலாச்சாரியின் ஆதரவாளரான இவர் இந்திய சுதந்திர போராளியாக இருந்தார். இவர் கோவை மாவட்ட காங்கிரஸ் செயலாளர், தமிழ்நாடு காங்கிரஸின் செயற்குழு உறுப்பினர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர், கோவை நகர சபை தலைவர் ஆகிய பதவிகளில் இருந்தார்.