கோலங் காண் படலம் - 1239
சீதையின் மகிழ்ச்சி ((1239-1240))
1239.
கருங் கடை நெடுங் கண் ஒளி
யாறு நிறை கண்ணப்
பெருங் கடலின் மண்ட. உயிர்
பெற்று இனிது உயிர்க்கும்.
அருங் கலன் அணங்கு-அரசி.
ஆர் அமிழ்து அனைத்தும்.
ஒருங்குடன் அருந்தினரை
ஒத்து. உடல் தடித்தாள்.
கருநெடுங் கண்கடை ஒளியாறு நிறை- கருத்து நீண்ட கண்ணின்
கடைப் பகுதியிலிருந்து இராமனை நோக்கிப் பாய்ந்த ஒளிவெள்ளம்
ஆகிய ஆறு; கண்ணப் பெருங்கடலின் மண்ட - இராமபிரானின்
மேனி யென்னும் கடலிற் போய்ச் சங்கமிக்க; உயிர் பெற்று - ஐயம்
அனைத்தும் நீங்கி. கன்னி மாடத்தில் கண்டவனே இவன் என்னும்
துணிவால். (ஊசலாடிய உயிர்) புத்துயிர்ப்பெய்தி; இனிது உயிர்க்கும் -
வெய்துயிர்த்தல் நீங்கி. இனிமைதவழும் மூச்செறிந்தாள்; அருங்கலன்
அணங்கு அரசி - பிறர்க்கு அரிய அணிகலன்களை
யணிந்துள்ள தெய்வமங்கையாகிய சீதை; ஆர்அமிழ்து அனைத்தும்
ஒருங்கு உடன் அருந்தினரை ஒத்து உடல் தடித்தாள் -
(பேருவகையால்) பெறுதற்கு அரிய அமிர்தம் முழுவதையும் (தாமே)
உண்டவரைப் போன்று உடம்பு பூரித்தாள்.
இராமனின் திருமேனி. பிராட்டிக்குக் கடலுமாயிற்று. அதிற் பிறந்த
அமிழ்தும் ஆயிற்று. ஆகவே. இராமன் திருமேனி. பிராட்டிக்கு.
“திருக்கண்ணமுது” ஆயிற்று என்க. 38
