கோலங் காண் படலம் - 1219
பிராட்டிக்குக் காப்பிடுதல்
அயினி சுற்றிக் காப்பிடுதல்
1219.
நெய் வளர் விளக்கம் ஆட்டி.
நீரொடு பூவும் தூவி.
தெய்வமும் பராவி. வேத
பாரகர்க்கு ஈந்து. செம் பொன்
ஐயவி நுதலில் சேர்த்தி.
ஆய் நிற அயினி சுற்றி.
கை வளர் மயில் அனாளை
வலம் செய்து. காப்பும் இட்டார்.
நெய்வளர் விளக்கம் ஆட்டி - (அணிசெய்து முடித்த தோழியர்.
பிராட்டிக்குக் கண்ணேறு படும் என்று) நெய் நிறைந்த
விளக்கொளியைச் சுற்றிக்காட்டி. நீரொடு பூவும் தூவி - புனித
நீரினோடு கூடிய பூக்களையும் முன்னால் இறைத்து; தெய்வமும் பராவி
வேத பாரகர்க்குச் செம்பொன் ஈந்து - தெய்வத்தினையும் வழிபட்டு
வேதங்களைக் கரைகண்டறிந்த அந்தணாளர்க்குச் செம்பொன் தானம்
அளித்து; ஐயவி நுதலில் சேர்த்தி. ஆய்நிற அயினிசுற்றி -
சிறுவெண் கடுகின் பொடிகளை நெற்றில்
தீற்றி. ஆராய்ந்தெடுத்த செந்நிற ஆலத்தி
நீரைச சுழற்றி; கைவளர் மயில் அனாளை வலம் செய்து காப்பும்
இட்டார் - கைகளினால் எடுத்து வளர்க்கப்பட்ட மயிலைப் போன்ற
பிராட்டியை வலப்புறஞ் சுற்றிக் காப்பு நாணையும் இட்டனர்.
அயினி - செஞ்சோறு. ஆகு பெயராய் அதனோடு சேர்ந்த ஆலத்தி
மஞ்சள் நீரையும் குறித்தது. வெண்சிறு கடுகினை அப்புதல் தொல்
மரபு. கானில் வளர்கின்ற மயில்கள் உண்டு; இது. சனகன் கரங்களில்
வளர்ந்த மயில் என்பார். “கைவளர் மயில் அன்னாளை” என்றார்.
கண்ணேறு கழிக்கும் பழைய மரபினைத் தொகுத்து உரைத்தவாறு.
ஆலத்தி நீரில் கையைத் தோய்த்து நெற்றியில் அதைக் கொண்டு
பொட்டிடுதலைக் காப்பிடுதல் என்பர். 18
