கோலங் காண் படலம் - 1206
சுட்டி முதலிய அணிகள் அணிதல்
சுட்டி யணிதல்
1206.
விதியது வகையால் வான
மீன்இனம் பிறையை வந்து
கதுவுறு கின்ற தென்னக்
கொழுந்து ஒளி கஞலத் தூக்கி.
மதியினைத் தந்த மேகம்
மருங்கு நா வளைப்பதென்ன.
பொதி இருள் அளக பந்தி
பூட்டிய பூட்டும் இட்டார்.
விதியது வகையால் வானமீன் இனம் பிறையை வந்து
கதுவுறுகின்றது என்ன - கூடுதற்கரிய முறைப்படி வானத்து மீன்
கூட்டம் பிறைத் திங்களைப் பற்றிக் கொள்வது போல; கொழுந்து ஒளி
கஞலத்தூக்கி - சுட்டி என்னும் (விண்மீன்கள் வடிவினதாகிய)
ஒளியுமிழும் அணியை (நெற்றியில்) தொங்க விட்டு; மதியினைத் தந்த
மேகம் மருங்கு நா வளைப்பது என்ன - சந்திரன் என்னும் கன்றைப்
பெற்ற மேகம் என்னும் தாய் தன் நாவால் (வெளிப்புறத்திலிருந்து
கன்றைத் தடவ) நீட்டி வளைப்பது போல்; பொதி இருள் அளக பந்தி
பூட்டிய பூட்டும் இட்டார் - இருள் பொதிந்த முன் நெற்றி மயிரின்
ஒழுங்கிலே பூட்டுதற்கு உரிய பூட்டு என்னும் ஆபரணத்தையும்
பூட்டினர் (தோழியர்.)
சிறு விண்மீன் வரிசைபோன்று இணைந்து நெற்றிச் சுட்டி
நெற்றியில் தொங்குவது. விண்மீன்கள் பிறையைக் கவ்வ வந்தது
போன்றது என்றார். இறுதியடியிரண்டில். மேகம் தாய்க்கும். முகம்
சந்திரனுக்கும். பூட்டு எனும் அணி தாயின் நாக்கிற்கும் உவமையாம்.
இது இல்பொருள் உவமை. நெற்றிச் சுட்டியை உச்சி வகிட்டில்
இணைத்துப் பூட்டும் அணிபூட்டு. கூந்தல் தாய்ப்பசு போலவும்.
நெற்றிச்சுட்டி தாயின் கன்று போலவும். இவற்றை இணைக்கும் பூட்டு.
தாய்ப்பசுவின் நாக்குப் போலவும் இருந்தன என்க. 5
