கோலங் காண் படலம் - 1203

bookmark

சனகன் கட்டளையை ஏவல் மகளிர் தாதியரிடம் கூறல்

சனகன் ஏவிய மாதர் தாதியர்க்குச் செய்தி அறிவித்தல்
 
1203.

உரைசெய. தொழுத கையன்.
   உவந்த உள்ளத்தன். ‘பெண்ணுக்கு
அரைசியைத் தருதிர் ஈண்டு
   என்று. ஆயிழையவரை ஏவ.
கரை செயற்கு அரிய காதல்
   கடாவிட. கடிது சென்றார்.
பிரைசம் ஒத்து இனிய சொல்லார்.
   பேதை தாதியரில் சொன்னார்.
 
உரை  செய -  (இவ்வாறு) வசிட்ட முனி சொல்லியருள; தொழுத
கையன். உவந்த  உள்ளத்தன் -  (அது  கேட்டு)  கூப்பி வணங்கிய
கரங்களையும். மகிழ்ச்சி பொங்கிய மனத்தையும்  உடையவனான  சனக
மன்னன்;  பெண்ணுக்கு   அரசியைத்   தருதிர்   ஈண்டு  என்று
ஆயிழையவரை    ஏவ     -    பெண்ணினத்தின்    பேரரசியாம்
(பெருமாட்டியான)  சீதையை  இங்கே  அழைத்து  வாருங்கள்  என்று
ஆய்ந்தணிந்த  அணிகளையுடைய  மங்கையர் சிலரிடம்  ஆணையிட;
பிரைசம் ஒத்து  இனிய  சொல்லார் -  தேன்  அனைய இன்சொல்
பேசும் அப்பெண்கள்; கரை செயற்கு அரிய காதல் கடாவிடக்கடிது
சென்றார் -   அளவிடற்  கரியதாய்ச்   (சீதை மேல் உள்ள)  அன்பு
உந்தித்தள்ள   விரைந்து   சென்றவர்களாய்;   பேதை   தாதியரில்
சொன்னார் -  இளைய  பருவத்தினளான  சீதையின்   தோழியரிடம்
அச்செய்தியை (உடனே) போய்ச் சொன்னார்கள்.

கவிஞர்பிரான்     அரண்மனை   நடைமுறைகளை  நன்கறிந்தவர்
என்பதனை இப்பாவும் உணர்த்தும். ஆணைகளை  முறைப்படி ஒருவர்.
தமக்குக்  கீழ்  இருக்கும் ஒருவர்க்கு உரைக்க. அவர்  அவர்க்குக் கீழ்
இருப்பாரிடம்  உரைக்கும்  முறை  பண்டே  யிருந்தமை இப்பாடலால்
தெளியலாம். மாமுனி வசிட்டனின் ஏவல் ஆனதனால்   “உரைசெயத்
தொழுத  கையன்  உவந்த  உள்ளத்தன்”  ஆனான்  சனகன்.  சீதை.
திருமகள்        ஆதலால்.        “பெண்ணுக்கு          அரசி”
என்றார்.  “கரை  செயற்கு  அரிய  காதல்  கடாவிட”  ஆய  மகளிர்
சென்றனர்   என்பதனால்.   சீதை  மாட்டு  அவர்கள்   வைத்திருந்த
பேரன்பு  புலனாம்.  மகிழ்ச்சியால் அவர்கள் சொற்கள்  தேன்போன்று
இனித்தன  என்பார்.  “பிரைசம்  ஒத்து  இனிய சொல்லார்”  என்றார்.
பிரைசம் - தேன்.                                          2