கையடைப் படலம் - 333

bookmark

தசரதன் அழைக்க இராமன் வருதல்

333.

குருவின் வாசகம்
   கொண்டு. கொற்றவன்.
‘திருவின் கேள்வனைக் கொணர்மின்.
   சென்று’ என.-
‘வருக என்றனன்’
   என்னலோடும். வந்து
அருகு சார்ந்தனன்.
   அறிவின் உம்பரான்.
 
குருவின்  வாசகம் கொண்டு - குல குருவான வசிட்ட முனிவனது
சொற்களைச்   செவியேற்றுக்  கொண்டு; கொற்றவன்  - மன்னனாகிய
தயரதன்     (பக்கத்திலுள்ள   பணியாட்களைப்   பார்தது);  திருவின்
கேள்வனை  -   (இலக்குமியின் நாயகனான திருமாலின் அவதாரமான)
ராமபிரானை; கொணர்மின்  சென்று  என  -  சென்று  அழைத்துக்
கொண்டு  வருக  என்று  சொல்ல;  வருக என்றனன் - (பணியாட்கள்
சென்று      ராமனை     அடைந்து)     தந்தை     வருக    என
அழைத்தார்;என்னலோடும் - என்று சொல்லவே; அறிவின் உம்பரான்
- அறிவில் உயர்ந்து விளங்கும் ராமபிரான்; வந்து அருகு சார்ந்தனன்
- புறப்பட்டு வந்து. மன்னனருகில் சேர்ந்தான்.  

குரு: குல குருவாகிய வசிட்டன். வாசகம்: சொல் (பேச்சு).  கொண்டு:
ஏற்றுக்கொண்டு.   கொண்மின்:    அழைத்துவாருங்கள்  ‘கொணர்மின்’
என்றதால் ஏவப்பட்டோர் பலர் என்பது புலனாம்.  வருக:  வியங்கோள்
வினைமுற்று.   சார்தல்   -   சேர்தல்  உம்பர்   தலைமை  அறிவின்
உம்பரான்: மேலான அறிவுடையவன் ‘ஞான நாயகன்’ என்னலுமாம்.  17