கையடைப் படலம் - 331

bookmark

வசிட்ட முனிவன் தசரதனுக்கு உறுதிகூறுதல் (331-332)

331.

கறுத்த மா முனி கருத்தை உன்னி. ‘நீ
பொறுத்தி’ என்று அவற் புகன்று. ‘நின் மகற்கு
உறுத்தல் ஆகலா உறுதி எய்தும் நாள்
மறுத்தியோ?’ எனா. வசிட்டன் கூறினான்.
 
கறுத்த   மாமுனி   -   சீற்றம்  கொண்டெழுந்த   விசுவாமித்திர
முனிவனது;  கருத்தை  உன்னி  -  உள்ளக்  கருத்தை   நினைத்துத்
தேர்ந்து  (அவனை  நோக்கி); நீ பொறுத்தி என்று  அவன்புகன்று -
நீ பொறத்தருள்வாயாக  என   அவனுக்குச்   சொல்லிவிட்டு    (பிறகு
மன்னனைப் பார்த்து); நின் மகற்கு - உனது மகனாகிய  ராமபிரானுக்கு;
உறுத்தல் ஆகலா உறுதி - அடைவித்தற்கு அரிய நன்மைகளெல்லாம்;
எய்தும் நாள் மறுத்தியோ  -  வந்து  கூடும் நாளை  வேண்டாமென
மறுத்துக்  கூறுவாயோ; எனா வசிட்டன் கூறினான் -  என்று வசிட்ட
முனிவன் கூறலானான்.

கறுத்தல்:   சினத்தல். உன்னி: நினைத்து. பொறுத்தி: பொறுப்பாயாக.
மரியாதை  உணர்த்திற்று.  உறுத்தல்.  அடையச் செய்தல்  (பிறவினை)
உறுதி:   நன்மை.   மறுத்தியோ:  மறுத்துரைப்பாயோ   (அதிகாரத்தை
உணர்த்திற்று). ஆக+அலா: ஆகலா: ஆகமாட்டாது.

சினம்  கொண்டெழுந்த விசுவாமித்திரனைப் ‘பொறுத்தி’ எனக் கூறி
அமைதியுறச்   செய்தபின்.   மன்னனை  நோக்கி.  ‘உன்    மகனுக்கு.
‘உறுத்தலாகலா  உறுதி’  எய்தும்  நாள்  இது. இதை மறுத்தியோ’ என
வசிட்டன் கூறினான் என்பது கருத்து.                          15