கையடைப் படலம் - 329

bookmark

தசரதன் யானேகாப்பேன் , வேள்விக்கு எழுக எனல்

329.

தொடை ஊற்றின் தேன் துளிக்கும் நறுந் தாரான்
   ஒருவண்ணம் துயரம் நீங்கி.
‘படையூற்றம் இலன். சிறியன் இவன்; பெரியோய்!
   பணி இதுவேல். பனி நீர்க் கங்கை
புடை ஊற்றும் சடையானும். புரந்தரனும்
   நான்முகனும். புகுந்து செய்யும்
இடையூற்றுக்கு இடையூறாய். யான் காப்பென்;
   பெரு வேள்விக்கு எழுக!’ என்றான்.
 
தொடை   ஊற்றின்  தேன் துளிக்கும்  - தொடையின் ஊற்றுப்
போலத்  தேன்  துளிக்கின்ற;  நறுந்தாரான்  ஒரு வண்ணம் துயரம்
நீங்கி - மணம் பொருந்திய  மாலையணிந்த தயரதன் ஒருவாறு துயரம்
நீங்கியவனாய்;    படை   ஊற்றம   இலன்   சிறியன்  இவன்  -
படைக்கலப்  பயிற்சியில்  முதிர்ச்சி   அடையாத   சிறுவயதுடையவன்
இவ்விராமன்;   பெரியோய் -  தவத்திலும்.  மற்யை  சிறப்புக்களிலும்
பெரியோரே!;  பணி   இதுவேல்  -   எனக்குத்   தாங்கள்   இடும்
கட்டளை    இதுவேயானால்;   பனிநீர்க்  கங்கைபுடை    ஊற்றும்
சடையானும்  - குளிர்ந்த நீரையுடைய கங்கை பக்கங்களில்    ஊற்றிக்
கொண்டிருக்கும்    சடைமுடியையுடைய  சிவபிரானும்;  நான்முகனும்.
புரந்தரனும் - நான்கு முகங்களை  உடைய  பிரமனும்     இந்திரனும்;
புகுந்து   செய்யும்    இடையூற்றுக்கு   -    அவ்வரக்கர்களுக்குத்
துணையாக  வந்து   புகுந்து  செய்கின்ற  தீங்குகளுக்கு;   இடையூறா
நான்  காப்பென் - தடையாக  நின்று  நான்   காக்கிறேன்;   பெரு
வேள்விக்கு  எழுக  என்றான்  -  (நீங்கள்  செய்யத்   தொடங்கிய
அந்தப்)  பெரிய  வேள்வியை நிறைவேற்ற  இப்போதே  எழுந்தருள்க
என்றான்.

அன்றலர்ந்த   மலர்   மாலை    அணிந்திருக்கிறான்   ஆதலின்.
அம்மாலை  தேனைத்  துளிக்கிறது  என்பார். ‘’தொடையூற்றின் தேன்
துளிக்கும்  நறுந்தாரான்’’  என்றார்.  ஊற்றுதல்: கொட்டுதல். தொடை:
தேன்   கூடு.   துளித்தல்:   சொட்டுதல்.   தார்:  மாலை.  நறுந்தார்:
பண்புத்தொகை.   பணித்தல்:   கட்டளையிடுதல்.   பணி:  கட்டளை.
முதல்நிலைத்  தொழிற்பெயர்.  பனி:  குளிர்ச்சி. புடை: பக்கம்.  சடை:
மயிர்த்தொகுதி.  ‘இடையூற்றுக்கும்’ என்பதில் உம்மை தொகுக்கப்பட்டு
இடையூற்றுக்கு’’   என   நின்றது.   காப்பென்:   தன்மை   ஒருமை
வினைமுற்று.  எழுக:  வியங்கோள்  வினைமுற்று.  ஊற்றம்:  முதிர்ச்சி
‘’படை ஊற்றும் இலன்’’ படைக்கலப் பயிற்சியால் முதிர்ச்சி  அடையாத
சிறு  வயதினன்’  என்பது குறிப்பு. ‘’கங்கை புடையூற்றும்  சடையான்’’
கருத்துடையடை கொளணியாகும்.                            13