கையடைப் படலம் - 328

bookmark

தசரதன் துயர் உறுதல்

328.

எண் இலா அருந் தவத்தோன் இயம்பிய சொல்
   மருமத்தின் எறி வேல் பாய்ந்த
புண்ணில் ஆம் பெரும் புழையில் கனல் நுழைந்தா
   லெனச் செவியில் புகுதலோடும்.
உள் நிலாவிய துயரம் பிடித்து உந்த.
   ஆர் உயிர் நின்று ஊசலாட.
‘கண் இலான் பெற்று இழந்தான்’ என உழந்தான்
   கடுந் துயரம் - கால வேலான்.
 
எண்இலா அருந்தவத்தோன் - எண்ண முடியாத அரிய தவத்தைச்
செய்த   விசுவாமித்திரர்;  இயம்பிய   சொல்  -  சொன்ன   இந்தச்
சொற்களானது; மருமத்தின் எறிவேல் பாய்ந்து-மார்பின் மேல் எறிந்த
வேல்  பாய்ந்த:  புண்ணில்  ஆம் பெரும் புழையில் - புண்ணாகிய
புழையிலே;  கனல்  நுழைந்தால் என - கனன்று கொண்டிருக்கும் தீ
நுழைந்தது போல; செவியில் புகுதலோடும் - தனது காதுகளில் புகுந்த
போது;  உள்  நிலாவிய துயரம்  பிடித்து  உந்த  -  உள்ளத்திலே
நிலைத்துள்ள  துயரம்  (உயிரை) வெளியே தள்ள; ஆர் உயிர் நின்று
ஊசல்  ஆட  -  தயரதனது  அவ்வரிய  உயிர்  (உள்ளே போகவும்.
வெளியே  வரவுமாக)   ஊசல்போல்   ஆட;   கண்இலான்  பெற்று
இழந்தான் என  - கண்கள் இல்லாதவன் அதனைப் பெற்றுப் பின்னர்
இழந்தான் எனக்  கூறும்படி; காலவேலான் கடுந்துயரம் உழந்தான் -
பகைவனின்   உயிருக்கு   இறுதிக்காலம்   காட்டும்    வேலையுடைய
தயரத வேந்தன் கடுமையான துன்பத்தினாலே மிகு வருந்தினான்.

உள்  நிலாவிய துயரமாவது தயரதன் சிரவணனை அம்பால் கொல்ல
அவனது  பெற்றோர்  தந்த  சாபத்தால்  நிலவிய  துன்பமாம்.   உந்த:
தள்ள.  கண்  இலான்:  பிறவிக்குருடன்.  இடையில்   கண்   பெற்றும்
மீண்டும்   இழத்தல்  பெருந்துயர்  விளைவிக்கும்.    பிள்ளையில்லாத
தயரதன்  பெற்று.  பிரிவதால்  பெருந்துயர்   கொண்டான்  என்பதற்கு
உவமையாயிற்று.                                           12