கையடைப் படலம் - 326

bookmark

தசரதன் முனிவன்பால் யான்செய்வது அருளுக என்றல்

326.

உரைசெய்யும் அளவில். அவன் முகம் நோக்கி.
   உள்ளத்துள் ஒருவராலும்
கரை செய்ய அரியது ஒரு பேர் உவகைக்
   கடல் பெருக. கரங்கள் கூப்பி.
‘அரைசு எய்தி இருந்த பயன் எய்தினென்; மற்று.
   இனிச் செய்வது அருளுக!’ என்று
முரைசு எய்து கடைத்தலையான் முன் மொழிய.
   பின் மொழியும் முனிவன். ஆங்கே:
 
உரை   செய்யும்  அளவில் அவன் முகம் நோக்கி - இவ்வாறு
விசுவாமித்திரன்    தன்னைப்    புகழ்ந்து    பேசியபோது.  தயரதன்
அம்முனிவரது  முகத்தைப்  பார்த்து; உள்ளத்துள் ஒருவராலும் கரை
செய்ய  அரியதொரு  -  தனது  உள்ளத்திலே எவராலும் அளத்தற்கு
இயலாததாகிய  ஒரு; பேர் உவகைக் கடல் பெருக - பெரிய மகிழ்ச்சி
என்னும் கடல் பெருகவும்; கரங்கள் கூப்பி - தனது இரு கைகளையும்
குவித்து   (முனிவனை  வணங்கி);  அரசு  எய்தி   இருந்த  பலன்
எய்தினன் -  எனது  ஆட்சியை  அடைந்ததன் பயனை இன்று நான்
அடைந்தேன்;   மற்று.   இனிச்  செய்வது  அருளுக   என்று  -
இனி   நான்   என்ன   செய்யவேண்டும்    என்பதை  அருள்வீராக
என்று;   முரைசு  எய்து   கடைத்தலையான்  முன்  மொழிய  -
முரசுகள் முழங்கும் வாயிலை உடைய  தயரதன் முன்னர்  எடுத்தியம்ப;
ஆங்கே  பின்மொழியும் முனிவன்  -  அப்போதே   விசுவாமித்திர
முனிவன்பின் கூறுவானாயினான்.

உரை     செய்தல்: பேசுதல். ‘அளவு’ இங்குப் பொழுது குறித்தது.
உவகை:  களிப்பு.  கூப்பி:  குவித்து.  அரசு.  முரசு  என்பன எதுகை
நோக்கி அரைசு முரைசு என நின்றன. எய்தி: அடைந்து. எய்து: பகுதி.
மற்று:  வினைமாற்றுப்  பொருளில்  வந்தது.  அருளுக:  வியங்கோள்
கடைத்தலை:  தலைக்கடை  என்பது  மொழிமாறி  நின்றது.  முன்னே
மன்னன் மொழியப் பின்னே முனிவன் மொழிந்தான் என்பது  கருத்து.
‘உவகைக்  கடல்’  என்பதற்கேற்ப.  கரை  செய்ய  அரியது என்றார்.
‘முன்மொழியப் பின் மொழியும்’ என்பது முரண்தொடை.          10