கைகேயி சூழ்வினைப் படலம் - 1681
1681.
‘பாவமும் அருந் துயரும் வேர் பறியும்’ என்பார்;
‘பூவலயம் இன்று தனி அன்று; பொது’ என்பார்;
‘தேவர் பகை உள்ளன இவ் வள்ளல் தெறும்’ என்பார்;
‘ஏவல் செயும் மன்னர் தவம் யாவது கொல்?’ என்பார்.
பாவமும் அருந் துயரும்- இவன் ஆளப்போவதால் தீ வினைகளும்
தீர்த்தற்கரியதுன்பங்களும்; வேர் பறியும் என்பார் - அடியோடு அழியும்
என்பார்; பூவலயம் -இந்தப் பூமண்டலம்; இன்று தனி அன்று -
இப்பொழுது இராமன் ஒருவனுக்கே தனியுரிமை உடையதுஅன்று; பொது
என்பார் - எல்லார்க்கும் பொதுவுடைமை ஆகும் என்பார்; தேவர் பகை
உள்ளன - தேவர்களுக்குப் பகையாய் உள்ள அரக்கர் கூட்டங்களை; இவ்
வள்ளல் தெரும் என்பார் - இவ் இராமன் அழிப்பான் என்பார்; ஏவல்
செயும் மன்னர் - இவனுக்குஏவல் செய்யும் அரசர்களது; தவம் யாவது
கொல் என்பார் - நல்வினை எத்தன்மையதோஎன்பார்.
இராமன் ஆட்சியில் தம் பாவமும் துயரும் தீரும் என்றார் சிலர்.
இராமன் மக்கள்குறைகளைக் கேட்டறிந்து, அவர்கள் தாமே ஆட்சிபுரிந்தால்
எவ்வாறு நன்மையைப் பெறலாமோஅவ்வாறு நன்மையைப் பெறச்செய்வான்
என்னும் உறுதிப்பாட்டால் ‘பூவலயம் இன்று தனி அன்று; பொது’ என்றார்
சிலர். இராமன் ஆளும்போது தாங்களே ஆளுவதாகக் கருதினர்
என்பதாம். 102
