கைகேயி சூழ்வினைப் படலம் - 1664
சுமந்திரன் சொல்
சுமந்திரன் இராமனை அழைத்தல்
1664.
‘கொற்றவர், முனிவர், மற்றும்
குவலயத்து உள்ளார், உன்னைப்
பெற்றவன் தன்னைப் போலப்
பெரும் பரிவு இயற்றி நின்றார்;
சிற்றவைதானும், “ஆங்கே கொணர்க”
எனச் செப்பினாள்; அப்
பொன் - தட மகுடம் சூடப்
போதுதி, விரைவின்’ என்றான்.
‘கொற்றவ- அரசர்களும்; முனிவர் - இருடிகளும்;மற்றும்
குவலயத்துஉள்ளார் - பின்னும் இந்நிலவுலகத்தில் உள்ள மக்களும்;
உன்னைப் பெற்றவன்தன்னைப் போல - உன்னைப்பெற்ற தயரதனைப்
போல; பெரும் பரிவு இயற்றி நின்றார் -(உன்னிடம்)மிகுந்த அன்பைக்
காட்டி நின்றார்; சிற்றவைதானும் - சிற்றன்னையாகிய கைகேயியும்;
ஆங்கே கொணர்க எனச் செப்பினாள் - அவனிடம்உன்னை
அழைத்து வருமாறு சொன்னாள்; அப் பொன்தட மகுடம் சூட-
(ஆதலால்) அந்தப் பொன்னால் ஆகியபெரிய முடியை (நீ) சூடுவதற்கு;
விரைவின் போதி - விரைவாக வருவாய்;’ என்றான் -என்று சுமந்திரன்
சொன்னான்.
கொணர்கென - தொகுத்தல் விகாரம்; அகரம் தொக்கது. அவை -
அவ்வை; தாய்; இடைகுறைந்தது. 85
