கைகேயி சூழ்வினைப் படலம் - 1659

bookmark

வசிட்டன் வருகை

1659.    

ஆயது ஓர் அமைதியின்கண்,
     ஐயனை மகுடம் சூட்டற்கு
ஏயும் மங்கலங்கள் ஆன
     யாவையும் இயையக் கொண்டு,
தூய நான்மறைகள்
     வேதபாரகர் சொல்ல, தொல்லை
வாயில்கள் நெருக்கம் நீங்க,
     மா தவக் கிழவன் வந்தான்.

     ஆயது ஓர் அமைதியின்கண் - அத்தகைய சூழலில்;  மாதவக்
கிழவன் -  பெரிய தவத்தைச் செய்த வசிட்ட முனிவன்;  ஐயனை மகுடம்
சூட்டற்கு - இராமபிரானைமுடிசூட்டுவதற்கு;  ஏயும் மங்கலங்கள் ஆன
யாவையும் - பொருந்திய மங்கலப் பொருள்களாகியஎல்லாவற்றையும்;
இயையக் கொண்டு - பொருத்தமுற எடுத்துக்கொண்டு;  வேத பாரகத்
தூயநான்மறைகள் சொல்ல - வேதங்களைக் கரை கண்டவர்களான
அந்தணர்கள் தூய்மையான நான்குவேதங்களை ஓதிவர;  தொல்லை
வாயில்கள் நெருக்கம் நீங்க - பழைய வாயில்களில்உள்ளவர்கள்
நெருக்கத்தை நீங்கி விலகிக்கொள்ள;  வந்தான் - முடிசூட்டு மண்டபத்துக்கு
எழுந்தருளினான்.

     வசிட்ட முனிவன்மீது உள்ள மரியாதையால் அங்கங்கே வாயில்களில்
நின்றவர்கள் விலகிவழிவிட்டனர். வாயில்கள் பழையன எனினும்  நெருக்கம் 
புதியது.  வேத பாரகர். - வேதத்தைக்கரை கண்டவர்கள்;  பாரம் -
அக்கரை.                                                     80