கைகேயி சூழ்வினைப் படலம் - 1628
தயரதன் செயலறுதலும் கைகேயி துயிலுறுதலும்
1628.
கூறா முன்னம், கூறுபடுக்கும் கொலை வாளின்
ஏறு ஆம் என்னும் வன் துயர் ஆகத்திடை மூழ்க,
தேறான் ஆகிச் செய்கை மறந்தான்; செயல் முற்றி,
ஊறா நின்ற சிந்தையினாளும் துயிலுற்றாள்.
கூறா முன்னம் - (தயரதன் இவ்வரத்தை ஈந்தேன் என்று, கூறி
முடிப்பதற்குள் முன்னே;கூறுபடுக்கும் - இரு கூறாகப் பிளக்கின்ற;
கொலைவாளின் ஏறு ஆம் என்னும் -கொலைத் தொழிலையுடைய
வாளின் தாக்குதலோடு ஒத்ததாகும் என்று சொல்லத்தக்க; வன் துயர்
ஆகத்து இடை மூழ்க - கொடிய துன்பம் மனத்தில் புக; தேறான் ஆகி -
உணர்வற்றவன்ஆகி; செய்கை மறந்தான் - செயல்மறந்து மயங்கினான்;
செயல்முற்றி - (தன்காரியம்) முடிவுற்றதனால்; ஊறா நின்ற
சிந்தையினாளும் - மகிழ்ச்சி ஊறுகின்ற மனமுடையகைகேயியும்;
துயிலுற்றாள் - உறங்கினாள்.
இப்பாட்டில், தயரதன் துயரினால் செயலற்றுக் கிடக்க, கைகேயி
மகிழ்ச்சியினால் மெய்ம்மறந்துதூங்கினாள் எனக் துயருற்றார்க்கும்
மகிழ்ச்சியடைந்தார்க்கும் ஒரேநிலை நிகழ்ந்த தன்மை கூறப்பட்டது.வாள்
ஏறு - வாளின் தாக்குதல். இடியேறு என்பது போல, செயல் முற்றலாவது -
தான் வேண்டிய வரங்களைப்பெற்றுக்கொண்டது. 49
