கைகேயி சூழ்வினைப் படலம் - 1602
கைகேயியின் மறுமாற்றம்
கைகேயியின் கொடுஞ் சொற்கள்
1602.
‘திசைத்ததும் இல்லை;
எனக்கு வந்து தீயோர்
இசைத்ததும் இல்லை; முன் ஈந்த
இவ் வரங்கள்,
குசைப் பரியோய்! தரின், இன்று
கொள்வென்; அன்றேல்,
வசைத் திறன் நின்வயின் நிற்க,
மாள்வென்’ என்றாள்.
குசைப் பரியோய் - (மன்னன் கூறக் கேட்ட கைகேயி அவனிடம்)
‘கடிவாளம் பூட்டிய குதிரைகளைஉடைய அரசே!; திசைத்ததும் இல்லை -
நான் திகைத்ததும் இல்லை; தீயோர் எனக்குவந்து இசைத்ததும்
இல்லை - கொடியோர் எவரும் என்னிடம் வந்து வஞ்சனையாகச்
சொன்னதும் இல்லை; முன் ஈந்த இவ் வரங்கள் - முன்னே (வாயாற்)
கொடுத்த இவ்விரண்டு வரங்களை; இன்று தரின் கொள்வென் -
இப்பொழுது கொடுத்தால் பெற்றுக்கொள்வேன்; அன்றேல்- அன்றிக்
கொடுக்காமல் போனால்; வசைத்திறன் நின்வயின் நிற்க - பழியின்
கூறுகள் நின்னிடம் நிலையாக இருக்குமாறு; மாள்வென் - இறப்பேன்;’
என்றாள் -.
தயரதன் சொற்களால் அவனுக்குத் தான் கேட்ட வரங்களைத் தர
விருப்பமில்லை என்று உணர்ந்தகைகேயி, ‘வரம்கொடுத்தால் வாழ்வேன்;
இன்றேல் சாவேன்’ என்கிறாள். குசைப்பரியோய் -கருத்துடை யடைகொளி.
யான் குதிரையைச் செலுத்தித் தேர் ஊர்ந்ததனால் அல்லவா நினக்குப்புகழ்
உளதாயிற்று என்று குறிப்பித்தவாறு. கருத்துடை அடைகொளி அணி. 23
