கைகேயி சூழ்வினைப் படலம் - 1593
கேட்ட வரம் இவையெனல்
கைகேயி கேட்ட இரு வரங்கள்
1593.
‘ஏய வரங்கள் இரண்டின், ஒன்றினால், என்
சேய் அரசு ஆள்வது; சீதை கேள்வன் ஒன்றால்
போய் வனம் ஆள்வது’ எனப் புகன்று, நின்றாள் -
தீயவை யாவையினும் சிறந்த தீயாள்.
தீயவை யாவையினும் சிறந்த தீயாள் - கொடியவை என்று
சொல்லப்படும் எல்லாவற்றிலும்மேம்பட்ட கொடியவளான கைகேயி; ‘ஏய
வரங்கள் இரண்டின் - (நீ) கொடுத்த இரு வரங்களுள்;ஒன்றினால் - ஒரு
வரத்தினால்; என் சேய் அரசு ஆள்வது - என்மகன் பரதன் நாட்டை
ஆளுதல் வேண்டும்; ஒன்றால் - மற்றொன்றினால்; சீதை கேள்வன்
போய் வனம்ஆள்வது - சீதைக்குக் கணவனாகிய இராமன் (இந்நாட்டை
விட்டுச்) சென்று காட்டை ஆளுதல் வேண்டும்;எனப் புகன்று - என்று
சொல்லி; நின்றாள் - மனங் கலங்காமல் உறுதியாக நின்றாள்.
தீயவை - நெருப்பு, கூற்றுவன், நஞ்சு, பாம்பு முதலியன ‘சிறந்த’
என்பது கொடிய என்னும்பொருளைத் தரும், ‘நல்ல பாம்பு’ ‘நல்ல வெயில்’
என்பவற்றில் நல்ல என்பது கொடிய என்னும் பொருளைத் தருவது போல,
இத்தகைய கொடிய சொற்களை அஞ்சாது சொல்லி நிற்றல் இவளையன்றிப்
பிறர்க்கு அரிது என்பதனால் ‘புகன்று நின்றாள்’ என்றார். ஆள்வது
வியங்கோள் வினைமுற்று. 14
