கைகேயி சூழ்வினைப் படலம் - 1590
தயரதன் தருவேன் எனல்
தயரதன் வாக்குறுதி அளித்தல்
1590.
கள் அவிழ் கோதை கருத்து உணராத மன்னன்,
வெள்ள நெடுஞ் சுடர் மின்னின் மின்ன நக்கான்;
‘உள்ளம் உவந்துள செய்வென்; ஒன்றும் லோபேன்;
வள்ளல் இராமன் உன் மைந்தன் ஆணை’ என்றான்.
கள் அவிழ் கோதை- தேன் வழியும் கூந்தலையுடைய கைகேயியினது;
கருத்து உணராதமன்னன் - எண்ணத்தை அறியாத தயரதன்; வெள்ள
நெடுஞ் சுடர் மின்னின் - மிகுந்தபேரொளியையுடைய மின்னல்போல;
மின்ன நக்கான்- விளங்கும்படி சிரித்து; ‘உள்ளம்உவந்துள செய்வேன்-
உன் மனம் விழைந்தனவற்றைச் செய்வேன்; ஒன்றும் லோபேன் -அதில்
சிறிதும் உலோபம் செய்யேன்; உன் மைந்தன் - நினக்கு மகனும்;
வள்ளல் -பெருவள்ளுலுமான; இராமன் ஆணை - இராமன்மேல்
சத்தியம்;’ என்றான் -.
கைகேயியின் உபாயம் பயன் தந்தது இதனால் கூறப்பட்டது. தயரதன்
நகைபிறர் பேதைமையான்எழுந்தது. கைகேயி இந்நாள்வரை இராமனிடம்
பேரன்புடையவன் என்னும் உறுதியால் ‘ உன் மைந்தன்இராமன்’ என்றான்.
கள்ளவிழ் கோதை; அடையடுத்த ஆகுபெயர். லோபம் - வடசொல்;
ஈயாமை என்பதுபொருள். 11
