குலமுறை கிளத்து படலம் - 730

bookmark

அசுவமேத யாகம் நூறு செய்தவன்

730.

‘கயற் கடல் சூல் உலகு எல்லாம்
   கைந் நெல்லிக் கனி ஆக்கி.
இயற்கை நெறி முறையாலே
   இந்திரற்கும் இடர் இயற்றி.-
முயற் கறை இல்மதிக் குடையாய்!-
   இவர் குலத்தோன் முன் ஒருவன்.
செயற்கு அரிய பெரு வேள்வி
   ஒரு நூறும் செய்து அமைத்தான்.
 
முயல் கறை இல் - முயலாகிய களங்கம் இல்லாத; மதிக்குடையாய்
-  சந்திரனைப்  போல விளங்கும்  வெண்கொற்றக் குடையுடையவனே!;
இவர் குலத்தோன்- இம் மைந்தர்களது குலத்திலே;  முன்னொருவன்-
முன்புதோன்றினான்  ஓர் அரசன்; கயல் கடல் சூழ் உலகு எல்லாம்-
மீன்கள்  வாழும்  கடலால்  சூழப்பட்டுள்ள நிலவுலகம்   முழுவதையும்;
கைந்  நெல்லிக்  கனி  - உள்ளங்கையிலுள்ள  நெல்லிக்  கனிபோல;
ஆக்கி  - எளிதாக  தன் ஆட்சிக்குக் கொண்டு வந்து; இந்திரற்கும் -
தேவேந்திரனுக்கும்;  இடர் இயற்றி - (பதவி இழத்தலாகிய) துன்பத்தை
யுண்டாக்கி;  செயற்கு  அரிய -(பிறரால்)  செய்வதற்கு  அருமையான;
பெருவேள்வி     ஒருநூறும்     -   ஒப்பற்ற    பெரிய    நூறு
அசுவமேதயாகங்களையும்;  இயற்கை  நெறிமுறையால் - வேதங்களின்
விதி   முறைமை   வழுவாமல்;   செய்து   அமைத்தான்  - செய்து
முடித்தான்.

இப்     பாடலில்   குறிக்கப் பெற்றவன் சுதாசன் என்பவர். நகுடன்
என்று    குறிப்பாரும்      உண்டு.   சந்திரனிடமுள்ள   களங்கத்தை
முயலென்றும்.  மான்  என்றும்  பூச்     சாயை  என்றும். மறு என்றும்
கூறுவது கவிமரபாகும்.                                       10