குலமுறை கிளத்து படலம் - 727

bookmark

சிபி

727.

‘இன் உயிர்க்கும் இன் உயிராய்
   இரு நிலம் காத்தார் என்று
பொன் உயிர்க்கும் கழலவரை
   யாம் போலும். புகழ்கிற்பாம்?-
மின் உயிர்க்கும் நெடு வேலாய்! -
   இவர் குலத்தோன். மென் புறவின்
மன் உயிர்க்கு. தன் உயிரை
   மாறாக வழங்கினனால்!
 
மின் உயிர்க்கும்- மின்னல்போல ஒளி விடுகின்ற; நெடுவேலாய் -
நீண்ட வேல்  தாங்கிய சனகனே;  பொன்  உயிர்க்கும் கழலவரை -
விளங்கும்  வீரக்  கழலைப்  பூண்ட  இக்குலத்து   மன்னர்களை; இன்
உயிர்க்கும்  - (உலகிலுள்ள)  இனிமையான உயிர்கள் எல்லாவற்றிற்கும்;
இன் உயிராய்- தாம் இனிய உயிர் ஆக இருந்து; இரு நிலம் காத்தார்
-  பெரிய  நிலவுலகை  அரசாண்டார்கள்;  என்று  - என்று சொல்லி;
புகழ்கிற்பாம்  - புகழவல்லோம்; யாம் போலும் - நாம்தான் போலும்!
(புகழ்   நம்மால்  முடியாது;  ஏனெனில்);  இவர்குலத்தோன்  -  இக்
குமாரர்களின் குலத்தில் தோன்றிய அரசன் ஒருவன்; மென் பறவை -
மெல்லியபறவை  ஒன்றின்;  மன் உயிர்க்கு - நிலைபெற்ற உயிர்க்கு;
மாறாக -  ஈடாக; தன் உயிரை - தனது ஆருயிரை; வழங்கினன் -
கொடுத்தான்.  

இங்குக்     கூறப்   பெற்றவன் சிபி மன்னவன். இவன் நூறு அசுவ
மேதயாகம்    புரிந்து    நான்காம்    மனுவந்தரத்தில்    இந்திரனாக
அமர்ந்திருந்தவன்.  போலும் - ஒப்பில் போலி -  எதிர்மறைப் பொருள்
தந்தது.                                                    7