குரு நானக்
குரு நானக் தற்போது பாகிஸ்தானிலுள்ள பஞ்சாபிப் பிரதேசத்தில் இந்துக் குடும்பத்தில் பிறந்தார்.
கடந்த 1469 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி லாகூருக்கு அருகிலுள்ள ராய் போய் டி தல் வண்டி என்ற கிராமத்தில் பிறந்தார். அப்போது பாகிஸ்தான் என்ற நாடு இல்லை. இப்போது பிரிவினைக்குப் பிறகு இந்த ஊர், பாகிஸ்தான் எல்லைக்குள் இருக்கிறது. ஊர்ப் பெயரை மாற்றி நன்கன சாஹிப் என்று வைத்திருக்கிறார்கள்.
ஏழாம் நூற்றாண்டில் இஸ்லாம் மதம் மெதுவாக இந்தியாவில் கால் பதித்து வளர்ந்து வந்த எண்ணூறு ஆண்டுகளுக்கு மேலான காலக்கட்டம் அது.
நானக்கின் மூத்த அக்கா பீபி நானகி. இவர்களை சுல்தான்பூர் என்ற ஊரில் கல்யாணம் கட்டிக்கொடுத்தார்கள். மாப்பிள்ளை ஜெய்ராம். இவருக்கு லஹோர் 'கவர்னர் தௌலத் கான் லோதி 'அரண்மனையில் வேலை. அக்காவை விட்டுப் பிரிந்து இருக்க முடியாமல் நானக் அக்கா வீட்டுக்கே வந்துட்டார். பதினாறு வயசு ஆனதும் இவருக்கும் கவர்னர் அரண்மனையிலே ஒரு வேலையும் கிடைத்தது.
நானக்கிற்கு சிறு வயதிலிருந்தே ஏதோ அபூர்வ சக்தி இருப்பதாக அக்கா நம்பினார்கள். பள்ளிக் கூடத்தில் ஏழுவயதில் சேர்த்த போது பாரசீக முதல் எழுத்தோடு கடவுளை சம்பந்தப்படுத்தி ஆசிரியரை வியக்க வைத்திருக்கிறார். நானக்கிற்கு 19 வயதில் கல்யாணம் நடந்தது. மனைவி சுலக்னி.
இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் பிறந்தார்கள். ஸ்ரீ சந்த், லஷ்மி சந்த் என்று பெயர் சூட்டினார்கள்.
அவர்களுக்கு சுமார் 30 வயதான போது ஒரு நாள் வெளியே போன நானக் வீடு திரும்பவில்லை. ஆற்றங்கரையில் நானக்கின் ஆடைகள் மட்டும் கிடந்தது. ஆளைக் காணோம். குளிக்க ஆற்றில் இறங்கினவருக்கு ஏதோ ஆகிவிட்டது என்று தண்ணீருக்கடியில் தேடினார்கள். பலன் இல்லை.
மூன்று நாள் கழித்து வீட்டுக்கு வந்த நானக் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்தார்.
மறுநாள் அவர் தத்துவார்த்தமாக பேசினார், ''இந்துக்கள், முஸ்லீம்கள் வழியை நான் கடைப்பிடிக்கப் போவதில்லை. கடவுளுடைய வழியில் நடக்கப் போகிறேன். உண்மையான கடவுள் இந்துவும் இல்லை முஸ்லீமும் இல்லை. மூன்று நாளைக்கு முன் நான் கடவுள் கிட்ட போயிருந்தேன். அங்கே போனதும் எனக்கு அமிர்தம் கொடுத்தார்கள். கடவுள் என் கூடவே இருக்கிறேன் என்று சொல்லிட்டார். உங்களுக்கு அவரை பற்றிச் சொல்லும் குருவாக இருக்கும் படி என்னை ஆசீர்வதித்து அனுப்பினார். இது உண்மை என்று நினைக்கிறவர்கள் என் கூட வாருங்கள்" என்றார்.
நானக்கை நம்பி வந்தவர்ககளை சீக்கியர்கள் என்று அழைத்தார். இப்படித்தான் சீக்கிய மதம் உருவானது.
நானக் அன்று முதல் குரு நானக் ஆனார்.
பல இந்துக்களும் முஸ்லீம்களும் இந்தப் புது மதத்தில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
குரு நானக் ஆன கையோடு விரிந்த இந்தியாவின் நான்கு மூலைகளுக்கும் கிழக்கே வங்காளம், அஸ்ஸாம், வடக்கே திபெத், காஷ்மீரம், தெற்கே தமிழ்நாடு, மேற்கே பாக்தாத், மெக்கா மதீனான் என்று பயணம் மேற்கொண்டார்.
மெக்காவில் தங்கி இருந்த போது முஸ்லீம்களின் புனித ஸ்தலமான காபாவை நோக்கிக் காலை நீட்டிய படித் தூங்கி இருக்கிறார். இதை கண்ட இஸ்லாமிய மத குரு ஒருவர் கோபம் கொண்டு, ''கடவுள் இருக்கும் திசையிலே மரியாதைக் குறைவாய் காலை நீட்டலாமா?'' என்று கேட்டிருக்கிறார்.
"மன்னிக்க வேண்டும். தெரியாமல் செய்துவிட்டேன். கடவுள் இல்லாத திசையைக் கொஞ்சம் காட்டுங்கள். அந்தப் பக்கம் காலை நீட்டிக்கிறேன்'' என்று சொல்லி இருக்கிறார். ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்த அந்த முஸ்லீம் குரு, குரு நானக்கை நன்றாக உணர்ந்து கொண்டார்.
குரு நானக்கின் உபதேசங்கள்..!
சீக்கிய மதம் நன்றாக வளர்ந்து வந்தது. குரு நானக் அவர்களுக்கு 69 வயதான போது தன் காலம் நிறைவடையப் போவதை உணர்ந்தவராக மக்களை அழைத்து சீக்கிய மதத்தின் முக்கியம், கொள்கை எல்லாவற்றையும் மறுபடியும் பிரசங்கித்தபடியே இருந்தார்.
குருநானக் கூற்றின் படி மனிதர் தள்ள வேண்டிய ஐந்து முக்கிய குணங்கள்:-
* காமம்
* குரோதம்
* லோபம்
* மோகம்
* அகங்காரம்
நல்ல மனிதர்களுக்கு இருக்க வேண்டியவைகளையும் அவர்களுக்கு இருக்க வேண்டிய முக்கியக் கடமைகளையும் வலியுறுத்திச் சொன்னார்.
* தன்னலமில்லாத சேவை & எப்போதும் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். தேவைப்படும் இடத்தில் கொஞ்சமும் தயங்காமல் உதவிக்கரம் நீட்டுவது இந்த தன்னலமில்லாத சேவையில் வரும்.
* வீட்டுக்கும் நாட்டுக்கும் செய்யவேண்டிய கடமைகளில் ஒருபோதும் நழுவக்கூடாது.
* இறைவன் அருளால் ஈட்டிய வருமானத்தில் ஒரு பகுதியை தான தர்மம் செய்ய வேண்டும்.
* சத்தியம், தயை, பணிவு, அன்பு போன்ற நற்குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* கடவுளுக்கு முன் எல்லோரும் சமம்.
* ஒரே கடவுள். ஒரே குலம். பெண்களுக்கு மதத்திலும் மற்ற சடங்குகளிலும் சம உரிமை.
குரு நானக் இறந்தபின் அவரது உடலை எரிப்பதா? புதைப்பதா? என்று அவரின் முன்னாலேயே சர்ச்சை நடந்தது.
இந்துக்கள் எரிக்கும் கட்சியாவும் முஸ்லீம்கள் புதைக்கும் கட்சியாகவும் வாதம் செய்திருக்கிறார்கள். குரு நானக் ஒரு வழி சொன்னார். ''நான் இறந்தபிறகு நீங்கள் இரு தரப்பினரும் ஒவ்வொரு பூமாலையை என் உடல் பக்கத்தில் வையுங்கள். என் உடலையும் சேர்த்துப் போர்வையால் மூடி மூன்று நாள் அப்படியே இருக்கட்டும். மூன்றாம் நாள் திறந்து பாருங்கள். எந்தப் பக்கத்து பூமாலை வாடாமல் அப்படியே இருக்கிறதோ அந்த பிரிவினர் சொன்னபடி செய்து கொள்ளுங்கள்'' என்றாராம்.
உடலை காணவில்லை..!
அப்படியே செய்தார்கள் இரு சமூகத்தினரும் (இந்துக்களும், முஸ்லிம்களும்). மூன்றாம் நாள் பார்த்த போது. பூமாலைகள் மட்டுமே அங்கே இருந்தன. குரு நானக் உடலை காணவில்லை. எல்லாம் வல்ல இறைவனிடம் உடல் போய்விட்டது என்று சீக்கிய மதத்தினர் உணர்ந்து கொண்டனர். ஆனாலும், அந்த மாலைகளை எடுத்துக் கொண்டு போய் இந்து மதத்திலிருந்து வந்தவர்கள், எரித்திருக்கிறார்கள். முஸ்லீம் மதத்திலிருந்து வந்தவர்கள் அதை புதைத்தும் இறுதிக்கடன் செய்திருக்கிறார்கள்.
குரு நானக் இந்த பூவுலகை விட்டு நீத்த நாள் 1539, செப்டம்பர் 22 ம் தேதி.
