காவியம் பிறந்த களம் - 11
11.
நடையின்நின்று உயர் நாயகன் தோற்றத்தின்
இடை நிகழ்ந்த இராமாவதாரப் பேர்த்
தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதை
சடையன் வெண்ணெய்நல்லூர்வயின் தந்ததே.
நடையின் நின்று-நல்லொழுக்கத்தில் நின்று; உயர்-உயர்ந்த;
நாயகன் - திருமாலின்; தோற்றத்தின் இடை
நிகழ்ந்த-அவதாரங்களுக்குஇடையே ஒன்றாக நிகழ்ந்த; இராமாவதாரப்
பேர்-இராமாவதாரத்தைக் குறித்தும் புகழ்மிக்கதுமான; தொடை
நிரம்பிய தோம் அறு மாக் கதை-செய்யுள்கள் நிறைந்த குற்றமற்ற
சிறந்த இந்தக் காப்பியம்; சடையன் - வள்ளல் சடையப்பரது;
வெண்ணெய் நல்லூர் வயின்-திருவெண்ணெய்நல்லூரில்;
தந்தது-இயற்றப்பட்டது.
இராமாவதாரம் என்ற பெயரில் பாடப்பட்ட இக் காப்பியம்
தோன்றியகளம் சடையப்பரின் திருவெண்ணெய்நல்லூராகும் என்பது
செய்யுளின் செய்தி. நடையின் நின்றுயர் நாயகனாவான் இறைவனாகிய
திருமால். தன் இயல்பில் வைகுந்தத்தில் எழுந்தருளியிருக்குங்கால்
குணங்குறி கடந்தவனாகிய பிரான், அவதாரமெடுத்து இறங்கி/இரங்கி
வரும்போது சாத்துவீக குணமுடையவனாகிறான்; இதனை
உணர்த்துவது’நடையில் நின்றுயர் நாயகன் தோற்றம்’ என்ற தொடர்,
இராமன் என்ற பெயர்கொண்ட அவதாரங்கள் மூன்று; பரசுராமன்
பலராமன் ஆகியோருக்கு இடையே நிகழ்ந்த அவதாரம் தசரத
ராமாவதாரம்.
தம்மை ஆதரித்த வள்ளலாகிய சடையப்பரை 394, 8264, 10327
ஆம் பாடல்களிலும் கம்பர் குறிப்பார். 11
