கார்முகப் படலம் - 811

bookmark

சீதை ஐயம் நீங்குதல்

சீதை தன் ஐயம் நீங்கலும் அகத்துள் உறுதி பூணலும்
 
811.    

‘கோமுனியுடன் வரு கொண்டல்” என்ற பின்.
‘தாமரைக் கண்ணினான்’ என்ற தன்மையால்.
‘ஆம்; அவனேகொல்’ என்று. ஐயம் நீங்கினாள்;
வாம மேகலையினுள் வளர்ந்தது. அல்குலே!
 
கோ முனியுடன்- பெருமை மிக்க  முனிவனுடன்; வரு கொண்டல்-
வந்த   மேகம்  போன்றவன்;  என்றபின்  -   என்று  கூறிய  பின்பு;
தாமரைக்   கண்ணினான்   -  தாமரைக்  கண்ணனான  திருமாலைப்
போன்ற ஆற்றல் உடையவன்; என்ற தன்மையால் - என்று  சொல்லிய
வகையால்;  ஆம்  அவனே  கொல்  -  (சீதை) அப்பொழுது (கன்னி
மாடத்து  அருகே) கண்ட அவனே போலும்; என்று ஐயம் நீங்கினாள்-
என்று  தான்  கொண்ட   சந்தேகம்  (சிறிது)  நீங்கப்  பெற்றாள்; வாம
மேகலையினுள்  -  அழகிய மேகலை அசைய; அல்குல்  வளர்ந்தது-
(அவளது) இடைப்பக்கம் பருத்தது.

தோழியின்   வார்த்தையால் வில்லிறுத்தவன் தான்கண்ட ஆடவனே
என்று துணிந்து மனத்திலிருந்த  சந்தேகத்தைச்  சிறிது நீக்கினாள் சீதை
என்பது.                                                  62