கார்முகப் படலம் - 810
810.
‘மாத்திரை அளவில் தாள் மடுத்து. முன் பயில்
“சூத்திரம் இது” என. தோளின் வாங்கினான்;
ஏத்தினர் இமையவர்; இழிந்த. பூ மழை;
வேத்தவை நடுக்குற முறிந்து வீழ்ந்ததே!
மாத்திரை அளவில்- ஒரு நொடிப்பொழுதில்; தாள் மடுத்து -
(அவ்வில்லின் அடிப்பக்க முனையை) தன் காலால் மிதித்துக்
கொண்டு; முன் பயில் சூத்திரம் - முன்பு பழகிய இயந்திரம்; இது என
- இதுவெனக் (கண்டவர்) கருதுமாறு; தோளின் வாங்கினான் - (அந்த
இராமன்) தன் தோள்வலியால் அதனை வளைத்தான் (அப்போது);
இமையவர் - தேவர்கள்; ஏத்தினர் - (இராமனைப்) புகழ்ந்தார்கள்; பூ
மழை - மலர் மழை; இழிந்த - (வானத்திலிருந்து) பொழிந்தது; வேந்து
அவை - (அந்த வில்) அரச சபையினர்; நடுக்குற - நடுநடுங்கும்படி;
முறிந்து வீழ்ந்தது - இடையே முறிந்து கீழே விழுந்து விட்டது.
அவை - ஆகுபெயர். 61
