கார்முகப் படலம் - 804
கவிக்கூற்று
804.
என்று கொண்டு. உள் நைந்து நைந்து.
இரங்கி. விம்மி விம்மியே.
பொன் திணிந்த கொங்கை மங்கை
இடரின் மூழ்கு போழ்தின்வாய்.
குன்றம் அன்ன சிலை முறிந்த
கொள்கை கண்டு. குளிர் மனத்து
ஒன்றும் உண்கண் மதி முகத்து
ஒருத்தி செய்தது உரைசெய்வாம்.
பொன்திணிந்த - (பொன்போன்ற) தேமல் நெருங்கிய; கொங்கை
மங்கை - தனங்களையுடைய சீதை; என்று கொண்டு - என்று பலவாறு
சொல்லி; உள் நைந்து - மனம் மிகவும் நைந்து; இரங்கி - இரக்கமுற்று;
விம்மி விம்மி - பெரிதும் விம்மி; இடரில் மூழ்கு போழ்தின் வாய் -
துன்பத்தில் அழுந்திய பொழுது; குளிர் மனத்து ஒன்றும் - குளிர்ந்த
மனத்தோடு கூடியவளும்; உண்கண் மதிமுகத்து - மைதீட்டிய
கண்களும் சந்திரன் போன்ற முகமும் கொண்டவளான; ஒருத்தி - ஒரு
தோழி; குன்றம் ஒன்று சிலை - மலை போன்ற வில்; முறிந்த
கொள்கை - முறிபட்ட செயலை; கண்டு - நேரிலே கண்டுவந்து;
செய்தது - கூறிய செய்தியை; உரை செய்வாம் - இனிச்
சொல்லுவோம். 55
