காடுகாண் காதை
கோவலன், கண்ணகி, கவுந்தியடிகள் என்னும் மூவரும், தென்திசை நோக்கி நடையைத் தொடர்ந்தனர். இடைவழியிலே மாங்காட்டு மறையோனைச் சந்தித்து, வழியின் இயல்புகளை அவன் மூலம் கேட்டு அறிந்தனர். கானுறை தெய்வம் வசந்த மாலையின் வடிவிலேத் தோன்றிக் கோவலனின் மதுரைப் போக்கைத் தடுக்க முயல்கிறது. 'வசந்தமாலையின் வடிவிலே தோன்றினால், மாதவியின் பேரிலுள்ள காதலினால் இவன் நமக்கு இசைவான்' என்று கருதிய அத்தெய்வம் கோவலனின் பாதங்களின் முன் வீழ்ந்து கண்ணீரும் உகுத்தது. வசந்தமாலை, ஏதோ பிழைபட்ட சொற்களைக் கோவலனிடம் சொன்னதால்தான் கோவலன், தன்னைக் காண வராமல் கொடுமை செய்து விட்டான் என்று மாதவி கூறி மயங்கியும் வீழ்ந்தாள் என்றும் மாதவி, கணிகையர் வாழ்வு, என்றும் கடைப்பட்ட வாழ்வே போலும்! என்று சொல்லி வருந்திக் கண்ணீர் உகுத்ததாகவும் வசந்தமாலையின் வடிவில் தோன்றிய கானல் தெய்வம் கூறியது. மயக்கும் தெய்வம் இக்காட்டிலே உண்டு என்று வியக்கத்தக்க மறையவன் முன்னரே கோவலனிடம் சொல்லியிருந்தனன். கோவலன் கூறிய மந்திரத்தால் வசந்தமாலை வடிவில் தோன்றியக் கானுறை தெய்வம் "யான் வனசாரிணி; நினக்குமயக்கம் விளைவித்தேன்; புனத்து மயிலின் சாயலினையுடைய நின்மனைவிக்கு, புண்ணிய முதல்வியான கவுந்தியடிகளுக்கும் என் செயலைக் கூறாது போய் வருக' என்று சொல்லி, அத்தெய்வம், அவ்விடத்து நின்றும் மறைந்து போய்விட்டது. அதன்பின்னர் மூவரும் ஐயையின் திருக்கோயிலைச் சென்றடைகின்றனர்.
