களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், பண்டைத் தமிழகத்தின் முப்பெரும் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு மன்னன். சங்க இலக்கியங்களில் ஒன்றான பதிற்றுப்பத்தின் நான்காம் பத்து இவனைப் பாடுகிறது. இதனைப் பாடியவர், காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர். இப் பதிகத்துள் இவன் ....சேரலாதற்கு வேளாவிக் கோமான் பதுமன் தேவி ஈன்ற மகன்.... எனக் குறிப்பிடப்பட்டுள்ளான்.
களங்காய்க்கண்ணி விளக்கம்:
களாக்காய் போன்ற கருநிற மணிகளையும், முத்துக்களையும் பொன் இழைகளில் கோத்து பட்டுத்துணியில் வைத்துத் தைத்துச் செய்த மாலையை இவன் தலைமுடியாக (தலைப்பாகை போன்ற மகுடம்) அணிந்துகொண்டிருந்தான் என்பதால் இந்தப் பெயரைப் பெற்றான்.
காலம்:
பிற சங்ககால மன்னர்களைப் போலவே இவனது காலமும் தெளிவாக அறியப்படவில்லை. எனினும் இவனைப் பாடிய கல்லாடனார் என்னும் புலவர், தலையானங்காலத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பற்றியும் பாடியுள்ளார். இதனால் பாண்டிய மன்னனும், நார்முடிச் சேரலும் ஏறத்தாழ ஒரே காலத்தவர் எனக் கருதப்படுகின்றது. அத்துடன் இவன் 25 ஆண்டுகள் வரை ஆட்சி செய்ததாகக் கருதப்படுகிறது.
செயல்கள்:
பூழி நாட்டுக்குப் படை எடுத்துச் சென்றது, நன்னன் என்னும் மன்னனைத் தோற்கடித்தது போன்றவற்றை இவனது பெருமைகளாகச் சங்கப்பாடல்கள் எடுத்துக் கூறுகின்றன.
இவனைப் பற்றிப் பதிற்றுப்பத்து பாடல் தரும் செய்திகள்:
1. நன்னனை வென்று அவனது காவல்மரமான வாகைமரத்தை வெட்டி வீழ்த்தினான். இந்த வெற்றிக்குப் பின்னர் நேரி மலையைத் தொழுதான்.
2. நெடுமிட , கொடுமிடல் ஆகியோரை வென்றான்.
3. தோட்டி மலையை வென்றான்.
4. தன் மக்கள் பிற நாடுகளுக்கு பிளைப்பு தேடி குடிபெயர்வதைத் தடுத்தான். அத்துடன் தனது நாட்டிலேயே பல தொழில்களை உருவாக்கினான்.
5. வண்டன் காவல் புரிந்த தூங்கெயில் போல் செல்வ வளம் மிக்கவன்.
6. நகைவர்க்கு (மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் கலைஞர்களுக்கு) அரண் போன்றவன்.
7. இவன் மனைவி செம்மீன் (அருந்ததி விண்மீன்) போலக் கற்புடையவள்.
