கண்ணம்மா - என் குழந்தை

கண்ணம்மா - என் குழந்தை

bookmark


ராகம் - பைரவி தாளம் - ரூபகம்

ஸ ஸ ஸ - ஸா ஸா - பபப
  தநீத - பதப - பா
பபப - பதப - பமா - கரிஸா
  ரிகம - ரிகரி -ஸா

என்ற ஸ்வர வரிசைகளை மாதிரியாக வைத்துக் கொண்டு மனோபாவப்படி மாற்றிப் பாடுக.

சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா!
  செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலி தீர்த்தே - உலகில்
  ஏற்றம் புரிய வந்தாய்! 1

பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா
  பேசும்பொற் சித்திரமே!
அள்ளி யணைத்திடவே - என் முன்னே
  ஆடி வருந்தேனே! 2

ஓடி வருகையில் - கண்ணம்மா
  உள்ளங் குளிரு தடீ!
ஆடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய்
  ஆவி தழுவு தடீ! 3

உச்சி தனை முகந்தால் - கருவம்
  ஓங்கி வளரு தடீ!
மெச்சி யுனை யூரார் - புகழ்ந்தால்
  மேனி சிலிர்க்கு தடீ! 4

கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான்
  கள்வெறி கொள்ளு தடீ!
உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா
  உன்மத்த மாகு தடீ! 5

சற்றுன் முகஞ் சிவந்தால் - மனது
  சஞ்சல மாகு தடீ!
நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு
  நெஞ்சம் பதைக்கு தடீ! 6

உன்கண்ணில் நீர்வழிந்தால் - என்நெஞ்சில்
  உதிரங் கொட்டு தடீ!
என் கண்ணிற் பாவையன்றோ? - கண்ணம்மா!
  என்னுயிர் நின்ன தன்றோ? 7

சொல்லு மழலையிலே - கண்ணம்மா!
  துன்பங்கள் தீர்த்திடு வாய்;
முல்லைச் சிரிப்பாலே - எனது
  மூர்க்கந் தவிர்த்திடு வாய். 8

இன்பக் கதைக ளெல்லாம் - உன்னைப்போல்
  ஏடுகள் சொல்வ துண்டோ?
அன்பு தருவதிலே - உனைநேர்
  ஆகுமோர் தெய்வ முண்டோ? 9

மார்பில் அணிவதற்கே -உன்னைப்போல்
  வைர மணிக ளுண்டோ?
சீர்பெற்று வாழ்வதற்கே -உன்னைப் போல்
  செல்வம் பிறிது முண்டோ? 10