கண்ணன் என் காந்தன்

கண்ணன் என் காந்தன்

bookmark


கனிகள் கொண்டுதரும் - கண்ணன்
  கற்கண்டு போலினிதாய்;
பனிசெய் சந்தனமும் - பின்னும்
  பல்வகை அத்தர்களும்,
குனியும் வாண்முகத்தான் - கண்ணன்
  குலவி நெற்றியிலே
இனிய பொட்டிடவே - வண்ணம்
  இயன்ற சவ்வாதும். 1

கொண்டை முடிப்பதற்கே; - மணங்
  கூடு தயிலங்களும்,
வண்டு விழியினுக்கே - கண்ணன்
  மையுங் கொண்டுதரும்;
தண்டைப் பதங்களுக்கே - செம்மை
  சார்ந்துசெம் பஞ்சுதரும்;
பெண்டிர் தமக்கெல்லாம் - கண்ணன்
  பேசருந் தெய்வமடீ! 2

குங்குமங் கொண்டுவரும் - கண்ணன்
  குழைந்து மார்பெழுத;
சங்கையி லாதபணம் - தந்தே
  தழுவி மையல் செய்யும்;
பங்கமொன் றில்லாமல் - முகம்
  பார்த்திருந் தாற்போதும்;
மங்கள மாகுமடீ! -பின்னோர்
  வருத்த மில்லையடீ! 3