கண்ணன்- என் தாய்

கண்ணன்- என் தாய்

bookmark

உண்ண உண்ணத் தெவிட்டாத - அம்மை
  உயிரெனும் முலையினில் உணர்வெனும் பால்;
வண்ணமுற வைத்தெனக் கே - என்றன்
  வாயினிற்கொண் டூட்டுமோர் வண்மையுடையாள்,
கண்ணனெனும் பெயருடையாள், - என்னைக்
  கட்டிநிறை வான் எனுந்தன் கையி லணைத்து
மண்ணெனுந்தன் மடியில் வைத்தே - பல
  மாயமுறுங் கதைசொல்லி மனங்களிப் பாள். 1

இன்பமெனச் சில கதைகள் - எனக்
  கேற்றமென்றும் வெற்றி யென்றும் சில கதைகள்
துன்பமெனச் சில கதைகள் - கெட்ட
  தோல்வியென்றும் வீழ்ச்சியென்றும் சில கதைகள்
என்பருவம் என்றன் விருப்பம் - எனும்
  இவற்றினுக் கிணங்கவென் னுளமறிந்தே
அன்பொடவள் சொல்லிவரு வாள்; -அதில்
  அற்புதமுண் டாய்ப்பர வசமடை வேன். 2

விந்தைவிந்தை யாக எனக்கே - பல
  விதவிதத் தோற்றங்கள் காட்டுவிப் பாள்;
சந்திரனென் றொரு பொம்மை - அதில்
  தண்ணமுதம் போல ஒளி பரந்தொழுகும்.
மந்தை மந்தையா மேகம் - பல
  வண்ணமுறும் பொம்மையது மழைபொழியும்;
முந்தஒரு சூரியனுண்டு - அதன்
  முகத்தொளி கூறுதற்கொர் மொழியிலையே. 3

வானத்து மீன்க ளுண்டு - சிறு
  மணிகளைப் போல்மின்னி நிறைந்திருக்கும்;
நானத்தைக் கணக்கிடவே - மனம்
  நாடிமிக முயல்கினும் கூடுவதில்லை;
கானத்து மலைக ளுண்டு - எந்தக்
  காலமுமொ ரிடம்விட்டு நகர்வதில்லை;
மோனத்தி லேயிருக்கும் - ஒரு
  மொழியுரை யாதுவிளை யாடவருங்காண். 4

நல்லநல்ல நதிகளுண்டு - அவை
  நாடெங்கும் ஓடிவிளை யாடி வருங்காண்;
மெல்ல மெல்லப் போயவை தாம் - விழும்
  விரிகடற் பொம்மையது மிகப் பெரிதாம்;
எல்லையதிற் காணுவ தில்லை; - அலை
  எற்றிநுரை கக்கியொரு பாட்டிசைக்கும்;
ஒல்லெனுமப் பாட்டினிலே - அம்மை
  ஓமெனும் பெயரென்றும் ஒலித்திடுங் காண்.    5

சோலைகள் காவினங் கள் - அங்கு
  சூழ்தரும் பலநிற மணிமலர் கள்
சாலவும் இனியன வாய் - அங்கு
  தருக்களில் தூங்கிடும் கனிவகை கள்
ஞாலமுற்றிலும் நிறைந் தே - மிக
  நயந்தரு பொம்மைகள் எனக்கென வே;
கோலமுஞ் சுவையு முற - அவள்
  கோடிபல கோடிகள் குவித்துவைத் தாள். 6

தின்றிடப் பண்டங்களும் - செவி
  தெவிட்டறக் கேட்கநற் பாட்டுக ளும்,
ஒன்றுறப் பழகுதற் கே - அறி
  வுடையமெய்த் தோழரும் அவள்கொடுத் தாள்;
கொன்றிடு மெனஇனி தாய் - இன்பக்
  கொடுநெருப் பாய், அனற் சுவையமு தாய்,
நன்றியல் காதலுக் கே - இந்த
  நாரியர் தமையெனைச் சூழவைத் தாள். 7

இறகுடைப் பறவைக ளும் - நிலந்
  திரிந்திடும் விலங்குகள் ஊர்வன கள்
அறைகடல் நிறைந்திட வே - எண்ணில்
  அமைந்திடற் கரியபல் வகைப்பட வே
சுறவுகள் மீன்வகை கள் - எனத்
  தோழர்கள் பலருமிங் கெனக்களித் தாள்;
நிறைவுற இன்பம்வைத்தாள்; - அதை
  நினைக்கவும் முழுதிலுங் கூடுதில்லை. 8

சாத்திரம் கோடி வைத்தாள்; - அவை
  தம்மினும் உயர்ந்ததோர் ஞானம் வைத்தாள்;
மீத்திடும் பொழுதினி லே - நான்
  வேடிக்கை யுறக்கண்டு நகைப்பதற்கே
கோத்தபொய் வேதங்களும் - மதக்
  கொலைகளும் அரசர்தம் கூத்துக்க ளும்
மூத்தவர் பொய்ந் நடை யும் - இன
  மூடர்தம் கவலையும் அவள்புனைந் தாள்! 9

வேண்டிய கொடுத்திடு வாள்; - அவை
  விரும்புமுன் கொடுத்திட விரைந்திடு வாள்;
ஆண்டருள் புரிந்திடு வாள்; - அண்ணன்
  அருச்சுனன் போலெனை ஆக்கிடு வாள்;
யாண்டுமெக் காலத்தி னும் - அவள்
  இன்னருள் பாடுநற் றொழில்புரி வேன்.
நீண்டதோர் புகழ்வாழ் வும் - பிற
  நிகரறு பெருமையும் அவள் கொடுப்பாள். 10