கண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை

கண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை

bookmark


கேதாரம் - கண்டஜாதி - ஏகதாளம்
ரஸங்கள் : அற்புதம், சிருங்காரம்

தீராத விளையாட்டுப் பிள்ளை -கண்ணன்
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. (தீராத)

1.  தின்னப் பழங்கொண்டு தருவான்; - பாதி
  தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
  என்னப்பன் என்னையன் என்றால் - அதனை
  எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். (தீராத)

2.  தேனொத்த பண்டங்கள் கொண்டு - என்ன
  செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்;
  மானொத்த பெண்ணடி என்பான் - சற்று
  மனமகிழும் நேரத்திலே கிள்ளி விடுவான். (தீராத)

3.  அழகுள்ள மலர்கொண்டு வந்தே - என்னை
  அழஅழச் செய்துபின், "கண்ணை மூடிக்கொள்;
  குழலிலே சூட்டுவேன்" என்பான் - என்னைக்
  குருடாக்கி மலரினைத் தோழிக்குவைப்பான். (தீராத)

4.  பின்னலைப் பின்னின் றிழுப்பான்; - தலை
  பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்;
  வன்னப் புதுச்சேலை தனிலே - புழுதி
  வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான். (தீராத)

5.  புல்லாங் குழல்கொண்டு வருவான்! - அமுது
  பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்;
  கள்ளால் மயங்குவது போலே - அதைக்
  கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம். (தீராத)

6.  அங்காந் திருக்கும்வாய் தனிலே - கண்ணன்
  ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்;
  எங்காகிலும் பார்த்த துண்டோ ? - கண்ணன்
  எங்களைச்செய்கின்ற வேடிக்கையொன்றோ? (தீராத)

7.  விளையாட வாவென் றழைப்பான்; - வீட்டில்
  வேலையென் றாலதைக் கேளா திழுப்பான்;
  இளையாரொ டாடிக் குதிப்பான்; - எம்மை
  இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான். (தீராத)

8.  அம்மைக்கு நல்லவன் கண்டீர்! - மூளி
  அத்தைக்கு நல்லவன், தந்தைக்கு மஃதே,
  எம்மைத் துயர்செய்யும் பெரியோர் - வீட்டில்
  யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான். (தீராத)

9.  கோளுக்கு மிகவுஞ் சமர்த்தன்; - பொய்ம்மை
  சூத்திரம் பழிசொலக் கூசாச் சழக்கன்;
  ஆளுக் கிசைந்தபடி பேசித் - தெருவில்
  அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான். (தீராத)