கடிமணப் படலம் - 1348
1348.
ஈந்து. அளவு இல்லது ஒர் இன்பம் நுகர்ந்ததே.
ஆய்ந்து உணர் கேள்வி அருந் தவரோடும்.
வேந்தனும். அந் நகர் வைகினன்; மெள்ளத்
தேய்ந்தன நாள் சில; செய்தது உரைப்பாம்;
வேந்தனும் - தசரதச்சக்கரவர்த்தியும்; ஈந்து அளவு இல்லது ஒர்
இன்பம் நுகர்ந்ததே - (சனகனைப்போலவே) கொடை கொடுத்து.
அதனால் வரும் எல்லையற்றதும் ஒப்பற்றதும் ஆகிய இன்பத்தை
நுகர்ந்து; ஆய்ந்து உணர் கேள்வி அருந்தவரோடும் - ஆராய்ந்து
உணரும் கேள்விச் செல்வத்தையும். அரிய தவச்செல்வத்தையும்
உடைய முனிவர்களுடனே (அளாவி மகிழ்ந்து); அந்நகர் வைகினன் -
அந்த மிதிலை நகரத்திலே தங்கியிருந்தனன்; நாள் சில மெள்ளத்
தேய்ந்தன - சில நாட்கள் மெல்லக் கழிந்தன; செய்தது உரைப்பாம் -
அதன்பின்பு நிகழ்ந்ததை (இனிமேல் வரும் படலத்தில்) கூறுவோம்.
ஒன்றைக்கொடுத்து. அக்கொடையால். பெறுவார் பெறும்இன்பத்தைக்
கண்டு தாம் மகிழும் இன்பத்திற்கு ஈடான இன்பம் உலகில்
இல்லையாதலின். “ஈந்து. அளவில்லதோர் இன்பம் நுகர்ந்து” என்றார்.
“ஈந்து உவக்கும் இன்பம்” (திருக். 228) எனும் அருமைக்குறளும்
அதற்குப் பரிமேலழகர் வரைந்த உரையும் இங்கு நோக்கத் தகுவன.
கேள்விச் செல்வம் மிக்க தவ முனிவரோடு தத்துவச் செல்வங்களை
ஆய்ந்து நாள் போவது தெரியாமல் சம்பந்தியாகிய சனகன் நகரில்
தசரதன் தங்கியிருந்தான் என்பார். “மெள்ளத் தேய்ந்தன நாள் சில”
என்றார். தன் நகரம் செல்வதைக் கூட மறக்கச்செய்தது கலைவல்ல
முனிவர்களிடம் கேட்ட கேள்விச் செல்வம் என்பது குறிப்பு. 103
